ப்ரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் ‘எலெக்ட்ரிக் கார் – சார்ஜிங் பாயிண்ட்’

கோவை: ப்ரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் எலக்ட்ரிக் கார் சார்ஜிங் பாயின்ட் தொடங்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்த மத்திய அரசு மக்களை ஊக்குவித்து வருகிறது. இதன் பயன்பாட்டை மக்களிடையே அதிகரிக்கும் வகையில் அரசு சாலைவரி, ஜி.எஸ்.டி வரி, பதிவு கட்டணம் ஆகியவற்றிகு சலுகைகளை வழங்கியுள்ளது. ஆனால் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய போதிய இடங்கள் இல்லாததால் இந்த வகை வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே உள்ளது.

இந்நிலையில் ஜியோன்சார்ஜிங் நிறுவனம் சார்பில் கோவை ப்ரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் புதிய சார்ஜிங் பாயிண்ட் துவங்கப்பட்டுள்ளது. இந்த சார்ஜிங் பாயிண்டை ப்ரூப் பீல்ட்ஸ் வளாகத்தின் முதன்மை செயல் அலுவலர் பாலசுப்ரமணியம் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். ரெட் டாக்சி நிர்வாக இயக்குநர் ஆனந்த் முதல் சார்ஜிங்-ஐ துவக்கி வைத்தார். தொடர்ந்து ஜியோன் சார்ஜிங் நிறுவனத்தின் நிறுவனர் கார்த்திகேயன் கூறுகையில், “25 கிலோவாட் திறனுடன் இந்த சார்ஜிங் மையம் அமைக்கப்ட்டுள்ளது. ஒரு காரை முழுமையாக சார்ஜ் செய்ய ரூ.600 முதல் ரூ.700 வரை செலவாகும். காரின் திறனுக்கி ஏற்ப 200 முதல் 350 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். இதனால் கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாயில் பயணம் செய்ய முடியும்.” என்றார்.