தகவல் கொடுங்கள் உடனிருந்து உதவுகிறோம்

– நல்லறம் அறக்கட்டளைத் தலைவர் அன்பரசன்

சிறு சேவை அறக்கட்டளையின் ஓராண்டு நிறைவைத் தொடர்ந்து கோவையில் பல்வேறு சேவைகளை செய்துவரும் அறக்கட்டளைகளுக்கு விருது வழங்கும் விழா ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்றது.

நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நிறைவு விழா மலர் வெளியிடப்பட்டது. பல்வேறு சமூகப் பணிகள் செய்துவரும் அறக்கட்டளைகள் மற்றும் தனி நபர்களுக்கு மொத்தம் 16 விருதுகளை வழங்கி அன்பரசன் பேசியதாவது: கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் பலரும் வெளியே வரவே அச்சப்பட்ட சூழலில், பல அறக்கட்டளைகள் சமூக சேவை செய்துள்ளீர்கள். உங்களைப் பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது. குறிப்பாக அதில், உணவு இல்லாத மக்களுக்கு உணவு கொடுத்ததையே முக்கியமான சமூக சேவையாகப் பார்க்கிறேன். அனைவருக்கும் உதவ வேண்டும். நீங்கள் பிறருக்கு உதவி செய்யும்போது எந்த உதவித் தேவைப்பட்டாலும் தகவல் கொடுங்கள். உங்களுக்கு உடனிருந்து உதவுகிறோம் என்றார்.

கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், துணை ஆட்சியர் முத்துராமலிங்கம், மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையர் செந்தில் அரசன், கோவை பார்க் லேயர் இயக்குநர் மோகன் குமார், சிறு சேவை அறக்கட்டளையின் தலைவர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.