எங்கே பொங்கலிட ?

இயகோகா சுப்பிரமணியம்

காளைமாடெருமை குளத்தடியில் குளிப்பாட்டி,

கொம்புகளில் அளந்தளந்து பலவண்ண மைதீட்டி

சூளையிலே சுட்டெடுத்த பானை விளிம்புவரை

கைமுறுக்கு, கடலை பொரி, இனிப்பென்று நிரம்பிவிட

பூளைமலர் வேப்பிலைகள் போகியன்று சாய்ந்திருக்க

புதுச்சாணம் தரைமெழுக, சுவர் சுண்ணம் தோய்ந்திருக்க,

ஏழைவீட்டுப் பொங்கலிலும் அமிர்தத்தின் சுவையிருக்கும்

ஏருழவன் வீடெல்லாம் சொர்கத்தின் சுகமிருக்கும்.

பழஞ்சோறு வரகு கம்பு தினை சோளம் அவரை

பச்சைப் பயறோடு கொள்ளும் பருப்புவகை,

விளைந்தாடும் கனிகள், அரசாணி, கத்திரிக்காய்

வெண்டைக்காய் வெங்காயம் கீரையுடன் மிளகாயும்

கலந்துண்ட தயிர்மோரும் பசுநெய்யும் பளபளக்க

கையிரண்டில் பூமிவந்து தலைவணங்கி மினுமினுக்க

இரந்துண்டு வாழாமல் உழுதுண்டு வாழுகின்ற

ஏருழவன் இறைவனுக்கு நேரென்று அறிவோமே

கரும்புச் சாறெடுத்து கற்கண்டு கனிபிசைந்து

புதுப் பொங்கல் முதல்கவளம் மாட்டுக்கு ஊட்டிவிட்டு,

இரும்புத் தோள்படைத்த இளைஞர்கள் திரண்டுவந்து

இமயத் திமில் காளைகளை வென்றெடுக்கும் விளையாட்டு;

பறக்கும் பந்தயத்து ஒத்தைவண்டி ஓட்டத்தை

திரண்டு வந்து கிராமமே கொண்டாடும் களிக்கூத்து;

அரும்பும் இளந்தளிர்கள், குறும்புக் கன்னியர்கள்

ஆடியசைந்து வரும் அழகு தமிழ் புதுப்பாட்டு;

புதுச்சேலை, பாவாடை, பொங்கி வரும் கன்னியர்கள்,

வளையோசை கொலுசோடு பூப்பறிக்க வலம்வருவார்;

மதுபோதை விழியசைவில் மயங்கிவிட்ட ஆடவரோ

மறுபடியும் ஓரக்கண் பார்வையினைத் தேடிவர

செதுக்காத பொற்சிலைகள் கும்மியிலே கைகொட்ட

காளையர்கள் சடுகுடுவில் வீரமதை நிலைநாட்ட

கதிர்சாயும் நேரத்தில் களம்விட்டுச் சென்றாலும்

காணும் பொங்கலன்று காதல் மணம் பொங்கிவரும் !

ஓடிவரும் நதிநீரைத் தெய்வமெனத் தொழுதவர்கள்,

ஆடகப் பொன்பெரு நிலத்தை உயிரென்று உழுதவர்கள்.

ஆடிவரும் நெல்கதிரை தானியத்தை அளந்தவர்கள்,

அனைவருமே பசியாற, அம்மகிழ்வில் வளர்ந்தவர்கள்

மாறிவரும் சமுதாய மாயவலைச் சக்கரத்தில்

மயங்கிவிட்ட விவசாயி மறுபடியும் எழவேண்டும்

மனிதஇனம் அத்தனையும் அவன்காலில் விழவேண்டும்,

அவன் படைக்கும் பொங்கலுக்கு ஆண்டவனும் வரவேண்டும் !

உரமென்று நஞ்சிட்டு, இயந்திரத்தால் உழவிட்டு,

மரபணு மாற்றத்து விதைத் சதியால் அழவிட்டு,

வரமென்று இலவசமும் சலுகைகளும் வாரிவிட்டு

வணிகத் தரகர்களால் வாய்ப்புகளைத் தவறவிட்டு

தரமற்ற இறக்குமதி உணவுகளால் ஏமாந்து

தலைமுறையை தின்னவைத்துக் கொள்ளையிடும் கொடுங்காலம் !

அறமிக்க அரசியலும், ஆன்மீகம் திரும்பும்வரை

அன்னமிடும் உழவரெல்லாம் இன்றெங்கே பொங்கலிட !