ரூ.4.85 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டம், பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி, ஆலாந்துறை பேரூராட்சி, இக்கரைபோளுவாம்பட்டி  ஊராட்சி, ஆகிய பகுதிகளில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில்,  முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்து, ரூ.2000 மதிப்பிலான அம்மா தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்களை  43 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ரமேஷ்குமார், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், தொண்டாமுத்தூர் ஊராட்சி உறுப்பினர் மதுமதிவிஜயகுமார்,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் ரூ.4.85 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்து, முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், தமிழக முதல்வர் அம்மா மினி கிளினிக்கை துவக்கிவைத்து, கோவை மாவட்டத்திற்கு 70 கிளினிக்குகளை அவர் வழங்கியுள்ளார். அதனடிப்படையில், பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி, ஆலாந்துறை பேரூராட்சி, இக்கரைபோளுவாம்பட்டி  ஊராட்சி ஆகிய பகுதிகளில், முதல்வரின் அம்மா மினி கிளினிக்குள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அம்மா மினி கிளினிக் சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் செயல்படும்.

குறிப்பாக சர்க்கரை அளவு, இரத்த சோகை, சிறுநீர் அல்புமின், சிறுநீர் சர்க்கரை, சளிப் பரிசோதனை, சிறுநீர் மூலம் கர்ப்பத்தை உறுதி செய்தல் ஆகிய பரிசோதனைகள் மற்றும் தொற்றா நோய்களுக்கான சிகிச்சைகள், புறநோயாளிகள் தொடர்பான அனைத்து சிகிச்சைகள், சிறு காயங்களுக்கான சிகிச்சைகள், சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றிற்கான சிகிச்சைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொதுவான சிகிச்சைகள், வயது முதிர்ந்தவர்களுக்கான சிகிச்சைகள் ஆகிய சிகிச்கைள் வழங்கப்படுகின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகள், உயர் இரத்த அழுத்த மருந்துகள், காய்ச்சல், சளி போன்றவற்றிற்கான மருந்துகள், சத்து மாத்திரைகள், சிறு காயங்களுக்கான மருந்துகள், புறநோயாளிகளுக்கான அனைத்து மருந்துகளும் மினி கிளினிக்கிலேயே வழங்கப்படும். என தெரிவித்தார்.