வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தல்

கோவை மாநகராட்சியில் பிரதான அலுவலகத்தில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் குடிநீர் பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று 29.12.2020 மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளான குளங்களை புனரமைத்து மேம்படுத்தும் பணிகள் மற்றும் பூங்காக்கள் அமைத்தல் பணி, சாலைகள் அமைத்தல், பாதாள சாக்கடை அமைத்தல், குடிநீர் வழங்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. பொழுதுபோக்கு பூங்காக்கள், சிறுவர் பூங்காக்கள், விளையாட்டுத்திடல், தெருவிளக்குகள், சாலையோர நடைபாதைகள் ஆகிய பணிகள் நடைபெற்று வருவதை குறித்தும், இத்திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், முத்தண்ணன் குளம் போன்ற கோயம்புத்தூர் மாநகரின் மையப்பகுதியில் உள்ள பல்வேறு குளங்கள் புதுப்பொழிவு பெற்று சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவது குறித்தும், சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் மாதிரி சாலைகள் அமைக்கப்பட்டு வருவது குறித்தும், மாதிரி சாலையில் மின்சாரம், மிளிரும் விளம்பர பலகைகள் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் போன்ற அனைத்து பயன்பாடுகளும் நிலத்தடியில் செல்லும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு நடைபாதை ஓரங்களில் நவீன மின்விளக்கு வசதிகள் ஆகிய பணிகள் நடைபெற்று வருவதைக் குறித்தும், பாதாளசாக்கடை மற்றும் கழிவுநீர் வெளியேற்றப்படும் முறைகள் குறித்தும், முடிவுற்ற பணிகள் குறித்தும், மேலும், சாலை வசதிகள் குறித்தும், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், செல்வசிந்தாமணிக் குளம், கிருஷ்ணம்பதி குளம், செல்வம்பதி, குமாரசாமி குளம், சிங்காநல்லூர் குளம், குறிச்சி குளம் ஆகிய குளங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்தும், கோவை மாநகராட்சியில் 24 மணிநேர குடிநீர்  வழங்கும் பணிகள் குறித்தும், ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையில் மாதிரி சாலைகள், மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டு வருவதை குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர், பந்தைய சாலையில் மாதிரி சாலை அமைக்கப்பட்டுவரும் பணிகள் குறித்தும், நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் குறித்தும் கேட்டறிந்த பின்னர், அதனைத் தொடர்ந்து மாநகராட்சியில் வார்டு வாரியாக குடிநீர் வழங்கும் பணிகள் நடைபெற்றுவருவதை குறித்தும், மழைக்காலங்களில் மழைநீர் சேமிப்பதற்காக வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதை குறித்தும் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் அனைத்துப் பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்குமாறும் தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார்.