உலகின் எடை குறைந்த செயற்கைக் கோளை வடிவமைத்த மாணவனுக்கு முதல்வர் பாராட்டு !

தஞ்சையை அடுத்த கரந்தை பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர் ரியாஸ்தீன். இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் மெக்கட்ரானிக்ஸ் படித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஐ டூடுல் லேர்னிங் (I Doodle Learning) நிறுவனம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா உடன் இணைந்து கியூப்ஸ் இன் ஸ்பேஸ் (cubes in space) என்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியை ஆண்டுதோறும் நடத்துகிறது. இந்த 2019-2020 காண போட்டியில் ரியாஸ்தீன் கலந்து கொண்டு இரண்டு சாட்டிலைட்டுகளை வடிவமைத்து நாசாவிலிருந்து ஏவ இந்த மாணவர் தேர்வாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இம்மாணவனின் செயலை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டிருந்ததாவது, “உலகின் எடை குறைந்த செயற்கைக் கோளை வடிவமைத்து சாதனை புரிந்து தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தஞ்சையை சேர்ந்த மாணவர் ரியாஸ்தீன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளும், பாராட்டுக்களும்! இதனை நாசா 2021-ல் விண்ணில் ஏவ இருப்பது கூடுதல் பெருமிதமும், மகிழ்ச்சியும் அளிக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும்,  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவரது ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, அமெரிக்க தனியார் நிறுவனம் இணைந்து நடத்திய போட்டியில், உலகிலேயே எடை குறைந்த செயற்கைக்கோளை உருவாக்கி வெற்றி பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையை சேர்ந்த சாதனை மாணவர் ரியாஸ்தீன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.” இவ்வாறு பதிவிட்டிருந்தார்.