குடியரசு தினவிழா அணிவகுப்பில் 6 வது முறையாக பங்கேற்கும் ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள்

குடியரசு தினவிழா அணிவகுப்பில் 6 வது முறையாக பங்கேற்கும் ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள்

கோவை: வருடா வருடம் ஜனவரி 26 ஆம் தேதி புதுதில்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த நாட்டு நலப் பணித்திட்டம் (NSS) மற்றும் தேசிய மாணவர் படை (NCC) மாணவர்கள் இந்த ஆண்டோடு சேர்த்து தொடர்ந்து 6 வது முறை பங்கேற்று தொடர் சாதனைப் படைத்துள்ளனர்.

இந்த அணிவகுப்பில் என்.எஸ்.எஸ் அணியின் சார்பில் மாணவர் பிரவின்குமார் கலந்துகொண்டு கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார். நவம்பர் 27 முதல் டிசம்பர் 6 வரை திருச்சியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்பதற்கான முதல்கட்ட பயிற்சியில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பாக இக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர் பிரவின்குமார் மற்றும் மாணவி பவித்ரா ஆகியோர் தேர்வாகி பத்து நாட்கள் பயிற்சி பெற்றனர். இந்தப் பயிற்சியில் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தி தற்போது மாணவர் பிரவின்குமார் புதுதில்லியில் நடைபெறவுள்ள குடியரசு தினவிழா அணிவகுப்பில் என்.எஸ்.எஸ். அணியின் சார்பாக பங்கேற்க தேர்வாகியுள்ளார்.

என்.எஸ்.எஸ் அணியில் மட்டுமல்லாது இதே கல்லூரியின் மாணவர் அரவிந்த் தமிழ்நாடு என்.சி.சி. அணியின் சார்பாக அதே குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளார் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். மேலும், மாணவி பவித்ரா அவர்களும் தமிழக அளவில் சென்னையில் ஆளுநர் முன்னிலையில் நடைபெறவுள்ள குடியரசு தினவிழா அணிவகுப்பில் என்.எஸ்.எஸ் சார்பில் பங்கேற்கவுள்ளார் என்பதும் பெருமைக்குரிய செய்தியாகும்.

இவ்வாறு ஜனவரி 26 குடியரசு தினவிழா நாளில் இந்தியாவின் தலைநகர் முதல் தமிழகத்தின் தலைநகர் வரையிலும் அரசாங்கத்தின் சார்பாக நடக்கவுள்ள அணிவகுப்பில் கோவையினைச் சேர்ந்த ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் கலந்துகொள்வதோடு, தொடர்ந்து 6 முறை இச்சாதனையினை நிகழ்த்தியதன் மூலம் இக்கல்லூரி நாட்டுநலப் பணியாற்றுவதிலும், சிறந்த இளைய சமுதாயத்தை உருவாக்குவதிலும் தனிமுத்திரை பதித்துவருகிறது எனக்கூறலாம்.

நமது இந்திய தேசத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து சாதனை படைக்கவுள்ள மாணவர்களுக்கு எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லஷ்மிநாராயணஸ்வாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் மாணவர்களை வாழ்த்தியதோடு இனிவரும் காலங்களிலும் தங்கள் கல்லூரி மாணவர்களின் சாதனைகள் தொடரும் என்று பெருமிதத்தோடு தெரிவித்தார். கல்லூரியின் என்.எஸ்.எஸ். அலுவலர் பேராசிரியர் பிரகதீஸ்வரன் குடியரசு தினவிழா அணிவகுப்பில் மாணவர்கள் பங்கெடுக்க தொடர்ச்சியாக தனது முனைப்பினை அளித்து வருகிறார்.