குமரன் மருத்துவமனையில் சிறு துளைத் தண்டு எலும்பு நரம்பு அறுவை சிகிச்சை

“இவ்வுலகம் நம் கையினுள் அடக்கம்“ என்ற கூற்றைப் போல் விஞ்ஞான வளர்ச்சி காரணமாக அனைத்து வசதிகளும் சுருங்கியுள்ளன. மருத்துவ விஞ்ஞானத்திலும் இந்த வளர்ச்சி பல பரிணாமங்களில் பிரதிபலிக்கின்றன. அதில் ஒரு பகுதிதான் ‘சிறு துளைத் தண்டு எலும்பு நரம்பு அறுவை சிகிச்சை முறை (minimally invasive spine surgery).

இதுகுறித்து குமரன் மருத்துவமனை டாக்டர் சந்தானம் கூறியதாவது, ‘தண்டு எலும்பு நரம்பு அறுவை சிகிச்சை முறை ஆபத்தானவை என்ற காலம் மாறி தற்போது சிறு துளை மூலம் அதைத் திறம்பட செய்ய இயலும் என்ற நிலை வந்துள்ளது. சிறு துளை மூலம் செய்யக்கூடிய அறுவை சிகிச்சை முறை, பல கோணங்களில் நமக்குப் பயனுள்ளதாக உள்ளது. வயிறு, குடல், நெஞ்சு, மூளை நரம்பியல் பகுதிகளைத் தொடர்ந்து தற்போது தண்டு எலும்பு நரம்பு நோய்களுக்கும், சிறு துளை மூலம் அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது.

இந்த சிகிச்சை முறையின் பலன்களை உணர நாம் சில அடிப்படை அமைப்புகளை அறிய வேண்டியது அவசியம்.  நமது தண்டு எலும்பு நரம்பு மண்டலத்தின் சில முக்கிய பாகங்களாக தண்டு எலும்பு (vertebrae), எலும்பு பிடை ஜவ்வு (intervertebral disc), எலும்புபிடை மூட்டு (facet joint), தசைகள் (paraspinal muscles) மற்றும் நார் ஜவ்வு (ligaments) திகழ்கின்றன.

தண்டு எலும்பு பகுதி, தலை முதல் இடுப்பு வரை நீண்டு இருந்தாலும், அது ஒரே எலும்பாக இல்லாமல், பகுக்கப்பட்டு கழுத்தில் 7 (Cervical), முதுகில் 12 (thoracic), இடுப்பில் 5 (lumbar) என தனித்தனி எலும்பாக உள்ளதால், நம்மால் குனிய, வளைய முடிகிறது. எலும்புபிடை ஜவ்வு வெளியிலிருந்து வரும் அழுத்தத்தை ஏற்கும் அளவு பஞ்சு போலவும், அதே நேரத்தில் பின்னிய நார் போலவும் இருப்பதால், நம்மால் குனிய, நிமிர, வளைய மற்றும் குதிக்க இயல்கிறது. இதற்கு எலும்பு பிடை முட்டும் உதவியாக உள்ளது.

மேலிருந்து கீழ் வரை நீண்டு இருக்கும் எலும்புடன் பிணைந்து அசைவுக்கும் உதவியாக இருக்கும் ஒரு முக்கிய பாகம் தசைகள் (paraspinal muscles). இவை அனைத்தும் ஒன்று சேர இயங்குவதால் நமது நடமாட்ட நிலைக்கு உதவியாக இருக்கின்றன.

கற்காலம் முதல் தண்டு எலும்பு நரம்பு சார்ந்த நோய்களுக்கு பலவாறாக வைத்திய முறைகள் முயற்சியில் இருந்தாலும், அறிவியல் அடிப்படையில், தண்டு எலும்பு நரம்பு சார்ந்த நோய்களுக்கு அறுவை சிகிச்சை முறையில் முன்னோடியாக இருந்து பல நுணுக்கங்களைத் தெளிவுபடுத்தியவர் விக்டர் ஹார்ஸ்லே எனும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர். அவரைத் தொடர்ந்து இந்தத் துறை பலவாறாக வளர்ந்து, தற்போது சிறுதுளை முயற்சியிலும் முன்னேறி வருகிறது.

50 வருடங்களுக்கு முன்னர் தண்டு எலும்பு, நரம்பு நோய்களுக்கு நீண்ட கீறல் கொண்டு, பல அளவுகளில் தண்டு எலும்புடன் பிணைந்த தசைகளைப் பிரித்து, சில எலும்பு பாகங்களை அகற்றி அறுவை சிகிச்சை முறை செய்யப்பட்டு வந்தது.

அவ்வாறான சிகிச்சைகளில் ஏற்படும் சிரமங்களாக அதிக நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கும் நிலை, அதிகப்படியான அறுவை சிகிச்சை சார்ந்த வலி, தோல் பகுதியில் நீளமான கிழிசல், அதிக நீளத்திற்கு எலும்புடன் பிணைந்து இருக்கும் தசைகளை அகற்றுவதால் தசைகளில் தளர்வு மற்றும் பலக்  குறைவு, அதிகப்படியான வலி மற்றும் சில எலும்பு பகுதிகள் அகற்றப்படுதல் போன்றவை உள்ளன.

சிறு துளை மூலம் அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் மேற்கொண்ட அனைத்து சிரமங்களையும் நாம் தவிர்க்க முடிகிறது. சிறு துளை மூலம் அறுவை சிகிச்சை செய்யும்போது, தோல் பகுதியில் இடும் கிழிசல் பன்மடங்கு சிறிய அளவில் உள்ளது. எலும்புடன் பிணைந்து இருக்கும் தசை பகுதிகளைப் பிரித்து எடுக்காமல் தசை நார்களின் இடையில் சென்று அறுவை சிகிச்சை செய்வதால் தசை வலி மிகவும் குறைவாக இருக்கும். மேலும் தசைகள் எலும்பிலிருந்து பிரித்தெடுக்கப்படாமல் இருப்பதால், தசைகளின் அடிப்படை பலமும் செயல்பாடும் பெரிதளவு பாதுகாக்கப்படுகின்றன. அகற்றப்படும் எலும்பு பகுதியின் அளவும் குறைவாக உள்ளதால் தண்டு நரம்பின் பாதுகாப்பும் தக்க வைக்கப்படுகின்றது.

இந்த காரணங்களால் அறுவை சிகிச்சை முடிந்த அதே நாளோ அல்லது மறுநாளோ நடமாட்ட நிலை எளிதில் சாத்தியமாகிறது. இதனால் மருத்துவமனையில் தங்கும் நாட்களும் குறைகிறது. இவ்வாறாக நவீன முறையிலான சிறு துளைத் தண்டு எலும்பு நரம்பு அறுவை சிகிச்சை முறை அது சார்ந்த நோய்களுக்கு விரைவில் குணம் கிடைக்க உதவுகிறது.

தண்டு எலும்பு நரம்பு சார்ந்த நோய்களான எலும்பு பிளவு அல்லது நொறுங்கும் காயங்கள் (spinal fracture) எலும்பிடை ஜவ்வு பிதுங்கி வெளியே வந்து நரம்பை பலமாக அழுத்தம் கொடுக்கும் நோய் (disc prolapse), தண்டு எலும்பு, மூட்டு ஜவ்வு தேய்மானங்களால் ஏற்படும் நரம்பு பாதை சுருக்கத்தால் நரம்பு அழுத்தம் (spinal canal stenosis with cord compression), தண்டு எலும்பு விலகல் (spondylolisthesis), தண்டு நரம்பு கட்டிகள் (spinal cord tumors) போன்ற அனைத்து நோய்களுக்கும் தற்சமயம் சிறு துளை மூலம் அறுவை சிகிச்சை செய்ய இயல்கிறது. இதனால் பலவிதங்களில் நாம் பயன் பெற முடிகிறது. இவ்வனைத்தும் நமது குமரன் மருத்துவமனையில் திறம்பட செய்யப்படுகிறது’ என்றார்.