ரஜினியின் புத்தாண்டு செய்தி என்ன?

புலி வருது, புலி வருது என்பதைப்போல அவர் வருவாரா? என்று நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தைப்பற்றி கேட்டுக் கொண்டு இருந்த காலம் போய், அவர் அரசியலுக்கு வந்தால் என்ன ஆகும் என்பதைப் பற்றிய கருத்துகள் வரத் தொடங்கி விட்டன.

அவர் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை என்று தமிழகத்தின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளும் கருத்துக் கூறிவிட்டன. என்றாலும் யாருக்கு அதிக பாதிப்பு என்று ஒரு பெரிய விவாதமே ஓடிக் கொண்டு இருக்கிறது. அதைத்தாண்டி இப்போதே கிட்டத்தட்ட பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்ட நடிகர் கமல்ஹாசன், தனது நீண்டகால நண்பரான நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து செயல்படுவது குறித்த தனது கருத்தைக் கூறியிருக்கிறார்.

ரஜினி ரசிகர்களிடமும் எப்படியோ தலைவர் அரசியல் களத்தில் இறங்கிவிட்டார் என்று ஒரு பெரிய நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டிருக்கிறது. மக்களும் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் என்ற புதுவரவை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக ரஜினிகாந்தின் புதிய கட்சிக்கு மக்கள் சேவை கட்சி என்று பெயர் வைத்திருப்பதாகவும் அந்த கட்சிக்கு பாபா முத்திரை சின்னம் கேட்கப்பட்டதாகவும் அது கிடைக்காமல் தேர்தல் ஆணையத்தால் ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வழக்கம்போல் சுடச்சுட வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

ஆனால் இதற்கிடையில் ஏற்கனவே தன்னுடைய பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னதுபோல ரஜினிகாந்த் தனது திரைப்படமான அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்ளச் சென்றுவிட்டார்.

வருகின்ற 2021ம் ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில்தான் சட்டசபை தேர்தல் வரும் என்றாலும் அதற்கான தயாரிப்புகளை மற்ற கட்சிகள் செய்து வரும் நிலையில் மக்கள் மனங்களில் சில கேள்விகள் எழுகின்றன. ரஜினிகாந்தின் கட்சி எப்போது தொடங்கப்படும், அதாவது அறிக்கை வெளியீடு, பத்திரிகையாளர் சந்திப்பு போன்ற பாலிடிக்ஸ் தாண்டி நடைமுறை அரசியல் எனும் மக்களை நேரடியாக சந்திக்கும் பயணம் எப்போது தொடங்கும் என்ற கேள்வி பல பக்கங்களில் இருந்தும் எழுந்திருக்கிறது.

குறிப்பாக தொடக்கத்தில் இருந்தே ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து பலரும் பலவிதமாக கருத்து தெரிவித்தபடியே இருப்பதும் அதற்கு அவர் எந்தவித மறுப்போ, ஆமோதிப்போ சொல்லாமல் தனி வழியில் செல்வதும் தொடரும் ஒரு தெளிவற்ற கதையாக இருக்கிறது. இந்தத் தனி வழியை விட்டுவிட்டு இனி அவர் தான் சொல்வதையும், செய்வதையும் அனைவருக்கும் புரியும்படி தெளிவுபடுத்துவது நல்லது.

அதுவே ஒரு நல்ல தலைவருக்கு எடுத்துக்காட்டு. அப்படி இல்லாமல் பொதுவாக மாற்றம் வேண்டும் என்பதும், கல்யாணத்துக்கு நாள் குறித்து பிறகு தள்ளிக்கொண்டே போவதுபோல இதோ, அதோ என்று போக்குக்காட்டுவது மக்களிடையே சலிப்பை உண்டு பண்ணிவிடும்.

மகாத்மா காந்தியோ, முகமது அலி ஜின்னாவோ, பெரியாரோ, அம்பேத்கரோ யாராக இருந்தாலும் மக்களிடையே நேரடியாக தங்கள் கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள். மக்களுடன் களத்தில் நின்றார்கள். பல போராட்டங்களில் கலந்துகொண்டார்கள். எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் துணிந்து ஆதரித்தோ, எதிர்த்தோ அஞ்சாமல் தங்கள் கருத்தை எந்தவித ஊதுகுழல் தயவும் இன்றி நேரடியாக சொன்னார்கள். முதலில் சமூக, அரசியல் களம் பிறகுதான் தேர்தல்களம் என்று களம் கண்டார்கள்.

ஆனால் ரஜினிகாந்தின் வியூகம் வேறு மாதிரியாக இருக்கிறது. அவர் கட்சி தொடங்குவதே தேர்தலில் நிற்பதற்குத்தான் என்பதுபோல முந்தின நாள் வரைக்கும் திரைப்படத்துக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு அடுத்த நாளில் இருந்து அரசியல் சேவை புரிய வருவேன் என்கிறார். வந்து என்ன சொல்லப் போகிறார், எப்படி செய்யப் போகிறார் என்பதில்தான் அவரது அரசியல் எதிர்காலம் அடங்கி இருக்கிறது.

இதற்கு முன்பு வரை அவர் அரசியலுக்கு வரவில்லை, வெறும் கருத்து மட்டும் சொல்லும் ஒரு மக்கள் செல்வாக்கு படைத்த மனிதராக மட்டுமே இருந்து வந்தார். இனி ஒரு அரசியல் கட்சி என்று வந்தால் அதற்கான நியாய தர்மங்களை கடைபிடித்து முறையாக நடக்க வேண்டிய பொறுப்பு நேரடியாக ரஜினிகாந்துக்கு இருக்கிறது. அவரைச் சுற்றி இருப்பவர்கள் அவ்வப்போது விதவிதமாக கருத்து சொல்லிக்கொண்டு இருப்பதும், அவற்றை ரஜினிகாந்த் ஆதரிக்கிறாரா இல்லையா என்று தெரியாமல் மக்கள் குழம்புவதும் இனி ரொம்ப நாளைக்கு ஓடாது.

அதைப்போலவே சும்மா, சும்மா ஆட்சி மாற்றம், அந்த மாற்றம், இந்த மாற்றம் என்று தலைப்புச்செய்திபோல பஞ்ச் டயலாக்காக பேசுவதைவிட தங்கள் எதிர்காலத் திட்டம் என்ன என்பதையும், மக்களுக்கு என்ன செய்யப் போகிறார், எந்த வகையில் செய்யப்போகிறார், தனது செயல்திட்டம் என்ன என்பதையும் தெளிவாக விளக்க வேண்டிய முக்கியமான கடமை ரஜினிகாந்துக்கு இருக்கிறது. இல்லாவிட்டால் ரஜினிகாந்த அல்ல, வேறு யாராக இருந்தாலும் வெறுமனே ஸ்டேட்மென்ட் விடும் கருத்து கந்தசாமியாக இருக்க முடியுமே தவிர மக்களுக்கு நன்மை செய்யும் தலைவராக முடியாது.