வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானிக்கு தேசிய விருது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குனர் சுப்பிரமணியன் தேசிய உர உற்பத்தியாளர்கள் குழுமத்தின் 50-வது ஆண்டு நிறைவிற்கான தேசிய அளவிலான விருது புதுடெல்லியில் நடைபெற்ற வேளாண் கருத்தரங்கில் வழங்கப்பட்டது. இது வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும், நானோ தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் விஞ்ஞானிகளுக்கும் வரப்பிரசாதமாக அமைவதுடன் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு தேசிய அளவில் பெருமை சேர்த்துள்ளது.

இந்த விருதினை மத்திய உரத்துறை அமைச்சர் ஸ்ரீ மன்சுக் மண்டாவியான் மேற்கண்ட கருத்தரங்கில் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். இக்கருத்தரங்கில் வேளாண் விஞ்ஞானிகளின் முக்கியத்துவத்தையும் அவர்களால் உருவாக்கப்படும் தொழில் நுட்பங்களினால் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பேசப்பட்டது. மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் நாட்டிலேயே முதன் முறையாக உருவாக்கப்பட்ட நானோ அறிவியியல் மற்றும் தொழில் நுட்பப் துறை பற்றி வெகுவாக பாராட்டினார்கள். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணை வேந்தர் குமார் ஆராய்ச்சி இயக்குனர் சுப்பிரமணியனை விருது பெற்றமைக்காக வாழ்த்தி சிறப்பித்தார். மேலும் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மூலமாக உருவாக்கப்பட்ட தொழில் நுட்பங்கள் விவசாய பெருமக்களுக்கு பெரிதும் பயன்படும் விதமாக இத்துறை விஞ்ஞானிகள் செயல்படவேண்டும் என்று அறிவுறுத்தினார்.