கோவை மத்திய சிறையில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் திட்டப்பணிகள்

கோவை மத்திய சிறையில் பி.ஆர்.நடராஜன் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14.22 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்ட கழிவறை உள்ளிட்ட திட்டப்பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டது.

கோவை மத்திய சிறையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறைவாசிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இந்த சிறைவாசிகளை சந்திக்க வாரம் மூன்று நாட்கள் உறவினர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த பார்வையாளர் பகுதியில் காத்திருக்கும் பொதுமக்களுக்கு கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் சிறைத்துறை அதிகாரிகள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கழிப்பிடம் மற்றும் ஆழ்குழாய் வசதிகளை செய்து தர கோரிக்கை வைத்தனர்.

இதனையேற்று பி.ஆர்.நடராஜன் எம்பி 14.22 லட்சம் நிதியினை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கி தந்தார். இதனையடுத்து கோவை மத்திய சிறையில் பார்வையாளர்கள் பயன்பாட்டிற்கான ஆண், பெண் கழிவறைகள், கழிவுநீர் தொட்டி மற்றும் ஆழ்குழாய் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தது. இதனை மக்கள் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கும் நிகழ்வு கோவை மத்திய சிறை வளாகத்தில் சிறைத்துறை சரக தலைவர் ஜி.சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.