‘‘எங்கள் உழைப்பை உறிஞ்சாதீர்கள்’’

மெட்ராஸ், கபாலி, பைரவா போன்ற படங்களில் நடித்துள்ள நடிகர் மிமி கோபி நம்மிடம் பகிர்ந்து கொண்ட சில சுவாரசியமான தகவல்கள்:

‘எனக்கு சின்ன வயசுல இருந்து நடிப்பின்மீது மிகுந்த எனக்கு ஆர்வம். மற்றவர்கள் போல் நேரடியாக சினிமாவிற்குள் நுழையாமல் நடிப்பைக் கற்றுக் கொடுக்கும் நடிப்புப் பட்டறை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தேன். நீண்ட நாள் கடின உழைப்பால் ‘‘GOD MIME’’ ஸ்டுடியோ ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு சிறு கதாபாத்திரங்கள் மூலமாக படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். என் முதல் படம் இயக்குநர் மாரிமுத்து இயக்கிய ‘கண்ணும் கண்ணும்’.

என் நடிப்புப் பட்டறையில் எப்பொழுதும் ஒழுக்கம், சுகாதாரம் மற்றும் சமுதாய உணர்வுகளை முதலில் கற்றுக்கொடுத்த பிறகுதான் நடிப்பில் உள்ள சுவாரஸ்யமான விஷயங்களை சொல்லிக் கொடுக்கிறோம். இங்கு அனைவரும் சமம் என்று சொல்லுவேன். மெட்ராஸ் படத்துக்கு அப்புறம் ‘கபாலி’ பட வாய்ப்பு கிடைத்தது. என் வாழ்க்கையில் மறக்க முடியாத சந்தோஷமான தருணம் அது. இயக்குநர் பா.ரஞ்சித் தம்பிக்கு இத்தருணத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன். நான் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகன், அவர்கூட நடிக்கும்போது, இந்த வயதிலும் எப்படி இவ்வளவு எனெர்ஜியுடன் இருக்கிறார் என்று வியந்து இருக்கிறேன்.

இது ஒருபுறம் இருக்க, நடிகர் விஜயைப் பற்றி இந்த இடத்தில் கூறியாக வேண்டும். நல்ல மனிதர். விஜய் சாருடன் பைரவா படம் நடித்து முடித்த பிறகு, என் சகோதரன் விட்டு நிகழ்ச்சிக்கு போயிட்டிருந்தேன். அப்போ ஈசிஆர் ரோட்ல ஒரு கார் வேகமா எங்களைத் தாண்டிப் போய் நின்றது. உடனே அந்த கார்ல இருந்து வந்த ஒரு நபர், உங்கள சார் கூப்பிடராறு வாங்கன்னு சொன்னார். நான் உடனே போய் பார்த்தபோது அங்கு நடிகர் விஜய் இருந்தார். உடனே என்னைப் பார்த்து, எப்படி இருக்கீங்கன்னு கேட்டார். இதான் ஒரு மனிதனுக்கு வேணும். அவர் எங்களை மதித்துப் பேசினது எப்போவும் மறக்க முடியாது.

சினிமாவ காதலிச்சு நம்ம உழைப்பைக் கொடுத்தால், நமக்கான சந்தோசம் திருப்பிக் கிடைக்கும். எனக்கு சமுதயத்தில் மதிப்பும் மரியாதையும் கொடுத்தது சினிமாதான். 200, 400 பேர் உழைக்கும் இடம் சினிமா. அந்த சினிமாவைத் திருடிப் பார்ப்பது, அந்த உழைப்பை உறிஞ்சிக் குடிப்பதற்கு சமம். திருட்டு விசிடி ஒழிக்கப்பட வேண்டும். அப்படி நடக்கும்பட்சத்தில் பல குடும்பங்கள் நன்றாக இருக்கும்’’.

  • பாண்டியராஜ்