ஆரோக்கிய சேது செயலியை பாராட்டிய  உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், செய்தியாளர்களிடம் கூறுகையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வைரசால் உயிரிழந்துள்ளனர். இதை கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பு மருந்தை கண்டறிவதற்கும் பல்வேறு முயற்சிகள் நடந்து வருகிறது.

இந்தியாவில் ஆரோக்கிய சேது செயலியை 15 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். கொரோனா பரவலை கண்டறியவும், குறிப்பிட்ட இடங்களில் பரிசோதனையை தீவிரப்படுத்தவும் இந்தியாவை சேர்ந்த சுகாதார அதிகாரிகளுக்கு இந்த ஆரோக்கிய சேது செயலி பெரிதும் உதவியுள்ளது. உலக நாடுகளுடன் டிஜிட்டல் பயன்பாடுகளின் செயல்த்திறனை ஆய்வு செய்வதற்கான பேச்சுவார்த்தையை உலக சுகாதார அமைப்பு மாடத்தி வருகிறது என்று அவர் கூறினார்.

கொரோனா நெருக்கடிக்கும் மத்தியில் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக கடந்த ஏப்ரலில் ‘ஆரோக்கிய சேது’ செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. மக்களை சுற்றியுள்ள கொரோனா அச்சுறுத்தல்கள், பாதிக்கப்பட்ட நோயாளிகள் குறித்த விவரங்களை வழங்குவதற்காக இந்த செயலி உருவாக்கப்பட்டது. மேலும், ஆரோக்கியமாக வாழத் தேவையான மருத்துவ ஆலோசனைகள், தகவல்களையும் பொதுமக்களுக்கு இச்செயலி வழங்கி வருகிறது.