கற்றதைக் கற்றுக்கொடு கல்லாததைக் கற்றுக்கொள் – கண்ணதாசன் அடிக்கடிக் கூறுவது

கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரித் தமிழ்த்துறையின் பைந்தமிழ் மன்றம் வாயிலாகக் கண்ணதாசன் ஒரு காலக்கணிதம் என்ற தலைப்பில் கருத்தரங்க நிகழ்வு இணைய வழியில் இனிதே நடைபெற்றது.

இரண்டாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவர் ராஜேஷ்குமார் வரவேற்புரை வழங்கினார். தமிழ்த்துறைப் பேராசிரியர் முத்துக்குமாரவடிவேல் சிறப்பு விருந்தினர் அறிமுகத்தைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினரும் கண்ணதாசன் பதிப்பகத்தின் நிறுவனர் & பதிப்பாசிரியருமாகிய காந்தி கண்ணதாசன் உரையாற்றினார்.

இவர் பேசுகையில், கவியரசு கண்ணதாசன் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலத்தையும் பாடியவர் எனத் தொடங்கி, கற்போம் – கற்பிப்போம் என்ற சொல்லை மிக அருமையாகக் கேபிஆர் நிறுவனம் செய்து வருகின்றது என்பதைப் பெருமிதத்தோடு தெரிவித்தார். பைந்தமிழ் மன்றம் கவிஞரைப் பற்றிச் சிந்திப்பது மிகப்பொருத்தம். கவிஞர் அவர்கள் தாயின் மீது அன்பும் தந்தையின் மீது மதிப்பும் குருவின் மீது வணக்கமும் தெய்வத்தின் மீது பக்தியும் கொண்டவர். பல்துறை அறிவு பெற்ற ஒரு மாமேதை. ஆங்கிலம் உட்பட பிற மொழிகளில் சிறப்புறத் திகழ்ந்தவர்.

காவியத் தாயின் தலைமகனாக உவமை இல்லாத கலை ஞானமாகவும் உணர்வே மெய்ஞானமும் பெற்றவர். கவிஞர் எத்துறையைப் பார்த்தாலும் அதில் தனக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்ளும் ஆற்றல் பெற்றவர். கவிஞரின் கவிப்புலம், இலக்கிய அறிவு, அவர் கற்றறிந்த நூலகள் எனப் பலவும் குறித்து விளக்கினார். கற்றதைக் கற்றுக்கொடு கல்லாததைக் கற்றுக்கொள் என்று கவிஞர் அவர்கள் அடிக்கடிக் கூறிக்கொண்டே இருப்பார் என்னும் நினைவுப் பகிர்வுடன், தொலைந்ததைத் தேடுவது தேடல், தொலைத்த இடத்தில் தேடுவதுதான் ஞானம் எனக் கவிஞர் கூறுவதை நினைவுபடுத்தி உரை வழங்கினார்.

இவர் கவியரசு கண்ணதாசனின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதுடன் மேதகு அப்துல் கலாமுடனான தனது அனுபவங்களையெல்லாம் சுட்டிக்காட்டி, மாணவர்களுக்கு நூல் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தித் தனது உரையை நிறைவு செய்தார்.

பைந்தமிழ் மன்றம் வழங்கிய இந்நிகழ்வில் தமிழ்த்துறைப் பேராசிரியர் கோகுல்நாத் ஒருங்கிணைத்தும் தொகுத்தும் வழங்கிய இந்நிகழ்வில் தமிழரசன்நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் புலமுதன்மையர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என 294 பேர் பங்கேற்றுப் பயனடைந்தனர்.