சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு

கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் ரூ.52 கோடி மதிப்பீட்டில் குறிச்சி குளம் புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதையும், உக்கடம் பெரிய குளம் பேஸ்-1 பகுதியில் குளம் புணரமைத்து, சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதையும் மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் இன்று (7.10.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் குளங்களை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இவற்றில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி குளமானது 5.1 கி.மீ சுற்றளவில் ரூ.52 கோடி மதிப்பீட்டில் குளத்தை சுற்றிலும் உள்ள கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருவதையும், இவற்றில் இயற்கை முறையில் தண்ணீர் சுத்திகரிப்பு செய்ய (பெட் லேன்ட்) அமைத்தல், மிதிவண்டி பாதை அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், சிற்றுண்டி உணவகம் அமைத்தல், மிதக்கும் நடைபாதைகள் அமைப்பதற்கான பணிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட விளையாட்டு தளங்கள் அமைத்தல், நீர்வழிப்பாதை மேம்படுத்துதல், குளத்திலுள்ள ஆகாயத்தாமரை அப்புறப்படுத்துதல் ஆகிய பணிகள் நடைபெற்றுவருவதை  பார்வையிட்ட ஆணையாளர் தொடர்ந்து உக்கடம் பெரியகுளம் பேஸ்-1 பகுதியில் குளத்தின் கரைகளை பலப்படுத்தி பூங்காக்கள், நடைபாதைகள் அமைத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதையும் பார்வையிட்ட ஆணையாளர் இப்பணிகளை விரைந்து செய்து முடிக்குமாறு  தொடர்புடைய அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தினார்கள்.

இந்த ஆய்வின்போது மாநகரப்பொறியாளர் லட்சுமணன், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி,  செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.