கே.பி.ஆர் கல்லூரியில் நாட்டுப்புறப்பாடல் சொற்பொழிவு

கோவை கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் தமிழ்த்துறை பைந்தமிழ் மன்றம் சார்பில்  “தமிழர் மரபில் நாட்டுப்புறப்பாடல்கள்” எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு இணையவழியில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் B.SC (I.T) முதலாமாண்டு மாணவி ஹர்ஷதயானி அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார். நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமையேற்று உரை வழங்கிச் சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சென்னை, பச்சையப்பன் அறக்கட்டளை, கோ.கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் செந்தில்குமார், நாட்டுப்புறப் பாடல்களின் தனித்துவம் குறித்து எடுத்துரைத்தார். இன்றளவும் நாட்டுப்புறப் பாடல்கள் இன்னார் மூலம்தான் தோன்றியது எனக் கூற இயலாத ஒன்று என்றும் மக்கள் தோன்றியக் காலம் தொட்டே மண்ணிற்கு ஏற்றப் பொன்னாக  நாட்டுப்புறப் பாடல்கள் விளங்கியதை எடுத்துக் கூறினார்.  நாட்டுப்புறப் பாடல்களின் வகைகளை எட்டாகப் பிரித்து தாலாட்டுப் பாடல், வளர்ச்சிப் பாடல், தொழிற்பாடல், காதல் பாடல், கொண்டாட்டப் பாடல், தத்துவப் பாடல், இறப்புப் பாடல் என எடுத்துக்கூறி அப்பாடல்களுக்கு ஏற்ற நாட்டுப்புறப் பாடல்களையும் இசைத்து மாணவர்களிடையே உரை வழங்கினார். நாட்டுப்புறப் பாடல்களில் மிகச் சிறப்புடையது தெம்மாங்குப் பாடல் எனக்கூறி அத்தெம்மாங்குப் பாடல் ஒன்றை இசையோடு பாடி மாணவர்களுக்கு வழங்கினார்.

மேலும், கதைப் பாடல்,  உறவுப் பாடல்,  ஏற்றப் பாடல்,  கூத்துப் பாடல் ,கும்மிப் பாடல் உள்ளிட்ட நாட்டுப்புறப் பாடல்களையும் மாணவர்களிடையே அறிமுகப்படுத்தினார். இன்றையக் காலகட்டத்தில் திரைப்படங்களில் இடம் பெறக்கூடிய நாட்டுப்புறப் பாடல்களையும் சான்று காட்டி  உரை வழங்கினார். பிறப்பு முதல் இறப்பு வரை மனித இனத்தை வழிநடத்திச் செல்வது நாட்டுப்புறப் பாடல்கள் தான் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்வில் முதன்மையர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என 213 நபர்கள் பங்கேற்றுப் பயனடைந்தனர்.