‘அவள்’ ஏற்படுத்தும் ‘பயம்’

பேய் கதை என்று சொல்லும்போதே நமக்குள் பயம் ஏற்படும். காரணம், சிறு வயதிலிருந்து  பேய் படம் என்றால் ஈவில் டெத், ஓமன், எண்டு ஆஃப் டேஸ் உள்ளிட்ட ஆங்கிலப்படங்கள் திகிலை உண்டாக்கியுள்ளன. தமிழ் சினிமாவில் தற்போதைய காலங்களில் பேய் படங்கள் அதிகம் வருகின்றன. இதில் உலகத் தரத்தில் பேய் படம் வந்தால் அதனை இரசிகர்கள் வெற்றியின் உச்சத்துக்குக் கொண்டுபோவார்கள்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டு அண்மையில் திரைக்கு வந்துள்ள “அவள்” படத்தைப் பற்றி நாம் கொஞ்சம் விரிவாக பார்ப்போம். படத்துக்கு கதைதான் முதல் கதாநாயகன். அதனை சிறப்பாக செய்த இயக்குநர் மிலின் ராய்க்கு முதலில் பாராட்டுகள்.

இயக்குனர் குறித்து சில தகவல்கள். இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குராக இருந்த இவர், ‘காதல் டு கல்யாணம்’ என்ற படமெடுக்கத் துவங்கினார். அப்படம் வெளியாவதற்கு சிறிது தாமதம் ஆனதால், அடுத்த படத்துக்கு உண்டான ஆயத்தப் பணியில் இறங்கினார். அதுதான், ‘அவள்’. தற்பொழுது நல்ல விமர்சனம், பாராட்டுகளைப் பெறும் இவர், பல விளம்பர படங்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் கதை, சித்தார்த், ஆண்ட்ரியா தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார்கள். இரண்டு பேரும் தங்கள் குடும்ப வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பதை அவர்கள் நெருக்கமாக இருக்கும் காட்சிகளைப் பார்த்தாலே புரியும். சித்தார்த் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு அழகான குடும்பம் புதுசாக குடிவருகிறது. அவர்கள் வீட்டில் ஜெனி என்ற நடுத்தர வயது பெண் இருக்கிறாள். அவரது உடம்பில், பல வருடங்களுக்கு முன்பு இறந்துபோன ஒரு பெண்ணின் ஆவி இறங்க, பிறகு ஜெனியின் நிலைமை என்ன ஆகிறது என்பதை அழகான திரைக்கதையுடன் பயத்தை சேர்த்து அளித்து இருக்கிறார் இயக்குநர்.

பல வருடங்களுக்கு முன்பு மூட நம்பிக்கை எவ்வளவு தூரம் இருந்தது என்பதைப் படத்தின் இரண்டாம் பாதியில் உணர்த்துகிறது. பேய், பிசாசு, சாத்தான் போன்றவை நம்மைச் சுற்றி இருக்கின்றது என்பதையும் படம் தெளிவாக உணர்த்துகிறது.

படத்தின் கதை நகர நகர நம்முள் பல கேள்விகள் எழுகின்றன. அந்த கேள்விக்கு விடை படத்தின் இறுதியில் புரிகிறது. எதிர்பாராத பல திருப்பங்கள் படத்தில் இருக்கின்றது. அவள் படத்தை உலக தரத்துக்கு எடுத்துக் காட்டிய ஒளிப்பதிவாளர் சேராயஸ் கிருஷ்ணா மற்றும் இசை அமைப்பாளர் கிரிஷ். ஒலி வடிவு அமைப்பாளர் விஜய் அரவிந்த். இவர்களின் உழைப்புக்கு நாம் ஒரு கைத்தட்டல் கொடுத்தாக வேண்டும்.

சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா, சுரேஷ், அதுல் குல்கர்னி ஆகியோரின் நடிப்பு சிறப்பாக அமைந்து இருப்பது படத்திற்கு பக்க பலம். படத்தில் குறை ஒன்றும் இல்லை. ஆனால் முத்த காட்சிகள் அதிகம். மொத்தத்தில் திரையரங்கில் பயம் ஏற்படுத்துகிறாள் அவள்’.

— பாண்டிய ராஜ்.