மார்பை பிளக்காமல் இரத்த நாள அறுவை சிகிச்சை: ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் 56 வயது பெண்ணுக்கு மார்பை பிளக்காமல் இரத்த நாள அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மார்பு பகுதி எக்ஸ்ரேயில், அவரது இடப்பக்க மார்பு பகுதியில் பெரிய அளவில் ஒரு வீக்கம் இருந்தது. அது வலது புற நுரையீரலை அழுத்திக் கொண்டிருந்தது. முழுமையாக அறிய சிடி ஸ்கேன் செய்தபோது பெருந்தமனி ரத்தநாளம் அருகில் பலூன் போன்று வீக்கம் இருந்தது. இந்த ரத்த நாளம் உடலில் பெரிய ரத்த நாளம் ஆகும். இந்த வீக்கம் பெரியதாகி, ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு வெடிக்குமானால், உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.
தற்போதைய நவீனமுறையில், மார்பை திறக்க வேண்டிய அவசியம் இல்லாததால், ரத்த நாளம் எந்த இடத்தில் வீக்கம் உள்ளது என்பதை ரத்த நாளத்தினூடே ஒரு ஒயர் போன்ற குழாயை செலுத்தி, வீக்கம் உள்ள இடம் கண்டறியப்பட்டு, வீக்கம் நீக்கப்படும். இந்த புதிய முறை அறுவை சிகிச்சையை, ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் கதிரியக்க குறுக்கீட்டுத் துறை டாக்டர் பி.முத்துராஜ், டாக்டர் எஸ்.தியாகராஜமூர்த்தி மற்றும் இருதய அறுவை சிகிச்சை துறை குழு வெற்றிகரமாக செய்து முடித்தனர். இத்தகைய அதிநவீன தொழில்நுட்பத்திலான அறுவை சிகிச்சை மிகவும் விலை உயர்வானது. ஆனால், எளிய மக்கள் பயனடையும் வகையில் ராமகிருஷ்ணா மருத்துவமனையில் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை கட்டணமின்றி மேற்கொள்ளப்பட்டது. ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் இந்த அதிநவீன அறுவை சிகிச்சையை முதல் முறையாக கையாளப்பட்டது குறிப்பிடத்தக்கது.