விளம்பரத்தில் நடித்த பணத்தை கல்விக்காக கொடுத்த விஜய் சேதுபதி!

அணில் உணவு வகைகளின் விளம்பரத் தூதுவராக நடிகர் விஜய் சேதுபதி ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அணிலின் புதிய சிறுதானிய சேமியா வகைகளை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய்சேதுபதி விளம்பரத்தில் நடித்த பணத்தை, அரியலூர் பெண் பிள்ளைகளுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி கொடுத்தார். திண்டுக்கல்லில் உள்ள அணில் நிறுவனம் சேமியா தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. தற்போது புதுப்பொலிவுடன் புதுச்சுவையுடன் பாரம்பரியம் மாறாமல் ‘அணில் ஃபுட்ஸ்’ என்று அறிமுகமாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இந்நிறுவனத்தின் புதிய சிறுதானிய சேமியா வகைகளை நடிகர் விஜய் சேதுபதி அறிமுகம் செய்து வைத்தார்.


கம்பு, வரகு, தினை, சோளம், கோதுமை ஆகிய சிறுதானியங்களை மூலப்பொருளாகக் கொண்டு இந்தச் சேமியா வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் புதுச்சுவையுடன், தரம், ஆரோக்கியம், சுவை ஆகியவற்றை மையமாக வைத்து மக்கள் நலனுக்காக இந்தச் சிறுதானிய சேமியாக்களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. மக்களின் நலனுக்காக, குழந்தைகளுக்கும் பிடிக்கும் சுவையில், ஆரோக்கியமான முறையில், தரமான, உணவுகளைத் தயாரிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இந்தப் புதிய சிறுதானிய சேமியா வகைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.” என அணில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான கமலஹாசன் தெரிவித்தார்.

மேலும், இந்நிறுவனத்தின் செயல் இயக்குனரான, சுகுமாரன் கூறுகையில்: ‘’எளிதாகச் சமைக்கக்கூடிய வகையிலும், அதேசமயம் காலை உணவு ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்றும் இந்தச் சேமியா வகைகளைத் தயாரித்துள்ளோம். இதில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்த வேதிக்கலப்பும் இல்லாத தரமான சேமியாவாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை உண்போரின் உடல்நலமும் ஆரோக்கியமாகும்.” என்றார். அணில் உணவு வகைகளின் விளம்பரத் தூதுவராக நடிகர். விஜய் கூறுகையில்: நான் விளம்பர படங்களில் அதிகமாக நடிக்காமல் இருந்தேன். சில விளம்பரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். இப்போது, அணில் உணவு வகைகளின் (Anil Food Products ) விளம்பரத்தில் நடித்துள்ளேன். இந்த விளம்பரப் படத்தில் நடித்ததற்காக எனக்கு கிடைத்துள்ள தொகையில், ஒரு பகுதியை கல்வி உதவித் தொகையாக வழங்க முடிவு செய்துள்ளேன்.

கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக அரியலூர் இருக்கிறது. இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 774 அங்கன்வாடிகளுக்கு தலா 5000 ரூபாய் வீதம் முப்பத்து எட்டு லட்சத்து எழுபது ஆயிரம் ( 38,70,000 ). ரூபாயும் மேலும் தமிழ்நாட்டில் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்கு தலா – ஐம்பதாயிரம் வீதம் ஐந்து லட்சம் ( 5,00,000 ) ரூபாயும் மேலும் தமிழ்நாட்டில் உள்ள 11 அரசு – செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு தலா ரூபாய் ஐம்பதாயிரம் வீதம் ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும் (5,50,000 ) மொத்தம் நாற்பது ஒன்பது லட்சத்து இருபதாயிரம் ரூபாய் (49,20,000 ) தமிழக அரசிடம் வழங்க முடிவு செய்துள்ளேன்.

கல்வியில் பின் தங்கிய மாவட்டமான அரியலூரில் இருந்து அதிக மதிப்பெண் எடுத்து டாக்டராக ஆசைப்பட்டு, அது முடியாமல் உயிர்நீத்த அனிதாவின் நினைவாக இந்தத் தொகையை வழங்குகிறேன்.’’ என்று குறிப்பிட்டுப் பேசினார்.