தனியார் ஆய்வகங்களில் பல்ஸ் – ஆக்சி மீட்டர் அவசியம்

மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளும்  தனியார் ஆய்வக பிரதிநிதிகள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மருத்துவர் கிருஷ்ணா, தனியார் கொரோனா தொற்று பரிசோதனை மையங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், கொரோனா தொற்று பரிசோதனையை மேற்கொள்ளும் தனியார் ஆய்வகங்கள் முடிவுகளை தாமதமின்றி வெளியிட வேண்டும். அவற்றில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மருத்துவமனைக்கு செல்வதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும், உடனடியாக அவர்களின் தொடர்பு விவரத்தினை சுகாதாரத்துறை மற்றும்  மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும்.

அனைத்து தனியார் ஆய்வகங்களிலும் பல்ஸ் – ஆக்சி மீட்டர் மூலம் அவர்களை அவசியம் பரிசோதனை செய்துகொள்வதுடன், அதில் அறிகுறி உள்ளவர்களை சோதனை முடிவு வரும் முன்னரே மருத்துவமனைக்கு அனுப்பிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.