மருத்துவ முகாம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்

மாநகராட்சி ஆணையாளர்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது, கோவை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முழுவீச்சுடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருப்பவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திட வேண்டும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைத்திட வழிவகை செய்திட தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் வீடுகளை காலை, மாலை ஆகிய இரு வேளைகளில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திட வேண்டும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் தொடர்பில் இருந்த நபர்கள் மற்றும் பணிபுரிந்த பகுதியில் உள்ள நபர்கள் கட்டாயம் சிறப்பு மருத்துவ முகாமிற்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்திட தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் நடைபெற்றுவரும் மருத்துவ முகாம்களின் எண்ணிக்கையினையும், மருத்துவ பரிசோதனைகளின் எண்ணிக்கையினையும் அதிகப்படுத்த வேண்டுமெனவும், சுகாதார பணியாளர்கள் வீடுவீடாக சென்று சளி, காய்ச்சல், இருமல் பரிசோதனைகளை மொபைல் வாகன குழு மூலம் அதிக எண்ணிக்கையில் எடுத்திட சுகாதார ஆய்வாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து பணியாளர்களும் கொரோனா தொற்று பரவுதலை தடுப்பதற்காக ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றிட வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதன்மை மண்டல மேலாளர் பிரசன்னா ராமசாமி, தமிழ்நாடு மாநில வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சாதனைக்குறள், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், துணை இயக்குநர் (சுகாதாரம்) ரமேஷ்குமார், நகர் நல அலுவலர் ராஜா, மண்டல சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.