கோவையில் கொரோனாவால் சுகாதார ஆய்வாளர் பலி

கோவையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சுகாதார ஆய்வளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தாக்கம் கோவையில் தொடந்து அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை, மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர் தொடர்ந்து தங்களது சேவையை செய்து வருகின்றனர். இதன் காரணமாக அதிகாரிகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது தொடர்கிறது.

இந்நிலையில், கோவையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுகாதார ஆய்வாளர் ஒருவர் தொற்றுக்குள்ளாகி பலியாகியுள்ளார்.

கோவை அரிசிப்பாளையம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குமார் என்ற 55 வயது சுகாதார ஆய்வாளர் பணி புரிந்து வந்தார். கொரோனா தடுப்பு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இந்த அதிகாரிக்கு கடந்த 3ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

தொடர்ந்து அவர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமமையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். சுகாதார ஆய்வாளருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்துள்ளது. மேலும், வைரஸ் தொற்று காரணமாக அவருக்கு நுரையீரல் பாதிப்பும் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அவர் நேற்று (15.8.2020) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கோவையில் முதன் முறையாக கொரோனா தொற்றுக்கு சுகாதார ஆய்வளர் பலியான சம்பவம் சுகாதாரத்துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.