கொடிசியாவில் கொரோனா நோயாளிகள் குத்தாட்டம்

கோவை கொடிசியா வளாகத்தில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் தங்களது மன அழுத்தத்தைப் போக்கி கொள்ள குத்தாட்டம் போட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வைரசால் பாதிக்கப்படுவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

அறிகுறி இல்லாமல் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கொடிசியா வளாகத்தில் உள்ள இரண்டு அரங்குகள் பிரத்யேக கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

இங்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இல்லாமல் தொற்று பாதித்த சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை பிரிந்து இருப்பதால் ஏற்படும் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை போக்க அகண்ட  திரைகளில் புதிய திரைப்படங்கள் மற்றும் திரை இசைப் பாடல்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

அந்த வகையில் நேற்று மதியம் கொடிசியா வளாகத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க திரைப்படப் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன. இதனால் உற்சாகம்  அடைந்த கொரோனா நோயாளிகள் ஒன்றுகூடி திரைப்படப் பாடல்களுக்கு ஏற்றவாறு குத்தாட்டம் போட்டனர். இதனை சக நோயாளிகள் கைத்தட்டியும் விசில் அடித்தும் உற்சாகப்படுத்தினர். இந்தக் காட்சிகள் https://youtu.be/FVlSbkDer48 தற்போது வெளியாகி உள்ளன.