டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நாளை முதல் தமிழகமெங்கும் களப்பணி: விஜயகாந்த் அறிவிப்பு

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நாளை முதல் தமிழகமெங்கும் களப்பணி மேற்கொள்ளப்படும். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் சுனாமி, மழை, புயல், வெள்ளம் போன்ற எந்த ஒரு இயற்கை இடர்ப்பாடுகள் வரும்போதெல்லாம் தேமுதிக களத்தில் இறங்கி மக்களுக்காக என்றைக்குமே உதவிசெய்யும். அந்த வகையில் தமிழகமெல்லாம் ஆட்கொண்டு இருக்கும் டெங்குவால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிகவின் அனைத்து மாவட்டம் சார்பாக நாளை ஒவ்வொரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சென்று பார்த்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகளை இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற பாணியில் நாம் உதவிகள் வழங்கிட வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் குப்பைகளை அகற்றுதல், தேங்கி நிற்கும் சாக்கடைகளைச் சீர்செய்தல், கொசு மருந்து தெளித்தல், அனைத்துப் பகுதியிலும் பிளிச்சிங் பவுடர் போடுவது போன்ற களப்பணிகளை ஆற்றவேண்டும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பதாகைகள் அடித்து மக்களுக்கு விநியோகம் செய்து டெங்கு காய்ச்சலில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ளும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

எந்த ஒரு மக்கள் பிரச்சனையிலும் களம் காணும் தேமுதிக இந்த முறையும் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்டத்திலும் நேரடியாக சென்று உதவி செய்யும்.

அந்த வகையில் திருப்பூர் மற்றும் கோவையில் பிரேமலதா, கடலூர் மற்றும் திருவண்ணாமலையில் கழக அவைத்தலைவர் ஆர்.மோகன்ராஜ், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் கழக பொருளாளர் வி.இளங்கோவன், திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் கழக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், சென்னை மற்றும் திருவள்ளூரில் கழக துணை செயலாளர் ப.பார்த்தசாரதி, திருப்பூர் மற்றும் கோவையில் கழக துணை செயலாளர் ஏ.எஸ்.அக்பர்,

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு கழக துணை செயலாளர் எஸ்.சந்திரா, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்திற்கு கழக உயர்மட்டக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.இளங்கோவன், இதுபோன்ற மற்ற அனைத்து மாவட்டங்களில், மாவட்ட கழக செயலாளர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் உதவிகளை செய்து மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அனைத்து கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டு செயலாற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.