கோவையில் 3.5 லட்சம் தகுதியற்ற இ-பாஸ் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

கோவை மாவட்டத்தில் இ-பாஸ் பெற விண்ணப்பித்த தகுதியில்லாத, மீண்டும் பதிவு செய்த 3.5 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிற மாவட்டங்கள், மாநிலங்களுக்கு செல்வதற்கு அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் இ-பாஸ் பெற்று செல்ல வேண்டும். திருமணம், மருத்துவ அவசரம், மரணம், வேலைக்கு திரும்புதல் உள்பட காரணங்களுக்காக செல்பவர்களுக்கு மட்டும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கு ஆன்லைன் மூலம் உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். வருவாய்த் துறையினர் விண்ணப்பங்களை ஆய்வு செய்து உரிய ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ள தகுதியான விண்ணப்பங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் மார்ச் முதல் இதுவரை 4 லட்சத்து 98 ஆயிரத்து 818 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் உரிய ஆவணங்கள் இணைக்கப்படாத, தகுதியில்லாத 3 லட்சத்து 54 ஆயிரம் 425 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மருத்துவ உதவிக்கு விண்ணப்பித்த 1.28 லட்சம், திருமணத்துக்கு விண்ணப்பித்த 23 ஆயிரம், மரணத்துக்காக விண்ணப்பித்த 10 ஆயிரம் விண்ணப்பங்களும் நிரகரிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஆட்சியர் ராசாமணி பேசுகையில்,
கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் தேவையின்றி வேறு பகுதிகளுக்கு செல்வதை தடுக்கும் வகையில் இ-பாஸ் நடைமுறை கொண்டுவரப்பட்டது.

தகுதியான அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 4 லட்சத்து 98 ஆயிரத்து 818 விண்ணப்பிங்க்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 734 விண்ணப்பங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர 3 லட்சத்து 54 ஆயிரத்து 425 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மற்றவை பரிசீலனையில் உள்ளது.

ஒரே இ-பாஸ்காக சிலர் 10க்கும் மேற்பட்ட முறைகள் விண்ணப்பிக்கின்றனர். அதே போல் நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள் மீண்டும், மீண்டும் விண்ணப்பிக்கின்றனர். இதனால் விண்ணப்பங்களின் பதிவு அதிகமாகியுள்ளது.

முன்பைவிட தற்போது இ-பாஸ் வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தினமும் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்களை நிலுவையில் வைக்காமல் அனுமதி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை விண்ணப்பங்களின் நிலவரம் குறித்து தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.