அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பிறந்த தினம்

பராக் ஒபாமா 1961ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள ஹவாயில் பிறந்தார்.

அமெரிக்க அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 44வது அரசியல் தலைவருமான பராக் ஹுசைன் ஒபாமா கென்யாவைச் சேர்ந்த சீனியர், கேன்சஸ் மாநிலத்தைச் சேர்ந்த வெள்ளை இன ஆன் டன்ஹமுக்கு பிறந்தார்.

இவரது இரண்டு வயதில் தாயாரும் தந்தையாரும் மணமுறிவு செய்து தந்தையார் கென்யாவுக்கு திரும்பினார். பின்னர் ஆன் டன்ஹம் இந்தோனேசியாவைச் சேர்ந்த லோலோ சுட்டோரோவை திருமணம் செய்தார். பராக் ஒபாமா தனது ஆறாவது அகவையிலிருந்து பத்தாவது அகவை வரை ஜகார்த்தாவில் வசித்தார். ஐந்தாவது படிப்பதற்கு முன்பு 1971இல் ஹொனலுலுக்கு திரும்பி உயர்பள்ளியிலிருந்து பட்டம் பெறுவது வரை பாட்டி தாத்தாவுடன் வசித்தார். ஒபாமா சொந்த தந்தையாரை  1982 இல் சாலை விபத்தில் உயிர் இழந்தார். தாயார் ஆன் டன்ஹம் 1995 இல் சூல்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். 2008 இல் நவம்பர் 3 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு ஒபாமாவின் பாட்டியும் இறந்தார்.

உயர்பள்ளியில் பட்டம் பெற்று லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு நகர்ந்து ஆக்சிடென்டல் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளாக ஒபாமா படித்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு இடமாற்றி 1983 இல் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார். இதையடு‌த்து நியூயார்க் நகரிலேயே மேலும் இரண்டு ஆண்டுகள் வசித்து வணிக பன்னாட்டு நிறுவனம், நியூயார்க் பொது ஆராய்ச்சிக் குழுமம் ஆகிய அமைப்புகளில் வேலை செய்தார். நான்கு ஆண்டுகள் நியூயார்க் நகரில் வசித்து சிக்காகோவின் தெற்கு பகுதிக்கு இடமாற்றி கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு துணையாக சமுதாய ஒருங்கிணைப்பு அமைப்பின் நிர்வாகியாக பணியாற்றினார். 1985 முதல் 1988 வரை இவரின் கண்காணிப்பில் இவ்வமைப்பு வளர்ந்து சிக்காகோ மக்களுக்கு கல்லூரி தயார்செயல், தொழில் பயிற்சி, மற்றும் குத்தகையாளர் உரிமைக்காக திட்டங்களை உருவாக்கியுள்ளார்.

1988இல் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த ஒபாமா ஒரு ஆண்டுக்கு பிறகு ஹார்வர்ட் சட்ட விமர்சனம் (Harvard Law Review) என்ற புகழ்பெற்ற சட்டம் தொடர்பான இதழின் பதிப்பாசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு இவ்விதழின் முதல் கருப்பினத் தலைவராக உறுதி செய்யப்பட்டார். இதனால் 1991இல் சட்டம் தொடர்பான பட்டத்தை பெற்ற பிறகு அமெரிக்க இன உறவு பற்றி நூலை எழுதுவதற்கு ஒரு பதிப்பகம் இவருடன் ஒப்பந்தம் செய்தது. 1995இல் “ட்ரீம்ஸ் ஃப்ரம் மை ஃபாதர்” (Dreams From My Father) என்ற தலைப்பில் இந்த நூல் வெளிவந்தது. பின்னர் சிக்காகோக்குத் திரும்பி 1992இல் சிக்காகோ சட்டக் கல்லூரியில் பணியாற்ற ஆரம்பித்தார். 1993இல் ஒரு சட்ட நிறுவனத்தில் சேர்ந்து 1996 வரை மனித உரிமை தொடர்பான வழக்குகளில் வழக்கறிஞராக பணிபுரிந்தார். இந்த சட்ட நிறுவனத்தில் இருக்கும் பொழுது எதிர்கால மனைவி மிசெல் ஒபாமாவை முதலாக சந்தித்தார்; மிசெல்லை 1992இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள், மலியா மற்றும் சாஷா.

2009 சனவரி 20 இல் அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நவம்பர் 6, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற மிட் ராம்னியை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார்.

அமெரிக்க வரலாற்றில் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர்  என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.

அதிபராவதற்கு முன் இவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராகப் பணியாற்றினார்.

இவர் 2009ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். 2009 இல் இருந்து 2017 சனவரி 20 வரை அமெரிக்க அதிபராக பதவியில் இருந்தார்.