கோவையில் இன்று 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவையில் 10 காவலர்கள் உட்பட இன்று மட்டும் 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கோவை அன்னூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் ஒருவருக்கு அண்மையில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மேலும் ஒரு சிறப்பு காவல் ஆய்வாளர், 2 முதல்நிலை பெண் காவலர்கள், 4 முதல்நிலை ஆண் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் சேர்த்து மொத்தம் 10 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அன்னூர் காவல் நிலையம் இரண்டாவது முறையாக தற்காலிகமாக அடைக்கப்பட்டது.

இது தவிர அன்னூர் காவலர் குடியிருப்பை சேர்ந்த 52 வயது ஆண், 11 வயது சிறுவன், 9 வயது சிறுமி, கோவில்பாளையம் காவலர் குடியிருப்பை சேர்ந்த 37 வயது ஆண், காந்திபுரம் சிறை மைதான காவலர் குடியிருப்பை சேர்ந்த 33 வயது பெண், கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் 28 வயது இளைஞர் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாக கருதும் பீளமேட்டில் 8 பேருக்கும், சித்தாபுதூரில் 7 பேருக்கும், அன்னூரில் 7 பேருக்கும், டவுன்ஹால், உக்கடம், குறிச்சியில் தலா 5 பேருக்கும், கணபதி, மேட்டுப்பாளையத்தில் தலா 4 பேர் உள்பட 227 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 458 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் கொரோனா நோய்த் தொற்றுக்கு 11 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.

கோவை, கணபதி புதூரை சேர்ந்த 55 வயது ஆண், ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த 70 வயது முதியவரும் ராம்நகரை சேர்ந்த 75 வயது மூதாட்டி, வீரகேரளத்தை சேர்ந்த 61 வயது முதியவர், சரவணம்பட்டியைச் சேர்ந்த 72 வயது முதியவர், வடவள்ளி இ.பி. காலனியை சேர்ந்த 70 வயது முதியவர், எஸ்.எஸ்.குளத்தை சேர்ந்த 65 வயது முதியவர், மலுமிச்சம்பட்டியை சேர்ந்த 62 வயது முதியவர், சுக்கிரவார்பேட்டையை சேர்ந்த 58 வயது ஆண், ரங்கநாதபுரத்தை சேர்ந்த 75 வயது முதியவர் மற்றும் சின்னவேடம்பட்டியை சேர்ந்த 40 வயது பெண் ஆகியோர் இன்று உயிரிழந்தனர்.

இதன் மூலம் கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை 70 ஆண்கள், 25 பெண்கள் சேர்த்து மொத்தம் 95 பேர் உயிரிழந்துள்ள னர்.