காவலர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய மாநகர காவல் ஆணையர்

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் காவலர்களையும் விட்டு வைக்கவில்லை.

கோவை மாவட்டத்தில் போத்தனூர், துடியலூர், சூலூர், உக்கடம், தொண்டாமுத்தூர், மதுக்கரை ஆகிய காவல் நிலையங்களில் பணியில் உள்ள காவலர்கள் கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டு காவல் நிலையங்கள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கோவை சரவணம்பட்டி மற்றும் செல்வபுரம் காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை சரவணம்பட்டி, செல்வபுரம் காவல் நிலையங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் கலந்து கொண்டு காவலர்களுக்கு முகக்கவசம், சாணிடைசர், கண்ணாடி, கையுறை, தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பாதுகாப்பு பெட்டகத்தை வழங்கினார்.

பின்னர் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் காவலர்களிடம் பேசுகையில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் பணியில் உள்ள காவலர்கள், முகக்கவசம், கையுறைகளை அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.