கோவையில் 188 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ; எந்தெந்த பகுதிகள்?

கோவையில் இன்று (14.7.2020) ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாள்தோறும் அதிகரித்து வருகிறது. மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வரும் சூழலில், தொற்று கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதுவரை 117 என்ற எண்ணிக்கை தான் கோவையில் ஒரே நாளில் பாதிக்கப்பட்டோரின் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது. ஆனால், இன்று புதிய உச்சமாக கோவையில் 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பாதிக்கப்பட்டோர் வசிக்கும் பகுதி தொடர்பான விவரங்கள் பின்வருமாறு:

கோவையில் அதிவிரைப்படையில் பணியாற்றி வரும் 36, 35 வயது மற்றும் 21 வயதுள்ள 3 காவலருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

மேலும், துடியலூர் நகை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வரும் 21 வயது மற்றும் 23 வயதுள்ள இரு இளைஞர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் குறிச்சி மாணிக்கம் சேர்வை வீதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 ஆண்கள், ஒரு பெண், கணபதி ஓம்சக்தி நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 ஆண்கள் ஒரு பெண், காளப்பட்டியை சேர்ந்த 2 பேர், வெள்ளலூர் தர்மாராஜா கோயில் வீதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 ஆண்கள், 2 பெண்கள், சரவணம்பட்டி அழகு நகரில் ஒரே குடும்பத்தில் 4 ஆண்கள், 2 பெண்கள், எம்.கே.பி. காலனியில் 3 பேர், ஒண்டிப்புதூர் நெசவர் காலனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள், ஒரு ஆண், கருப்புக் கவுண்டர் வீதியை சேர்ந்த 4 பெண்கள், 2 ஆண்கள், காரமடையை சேர்ந்த 3 பெண்கள், ஒரு ஆண், செல்வபுரம் செட்டி வீதி, சாமி அய்யர் வீதி, தெலுங்கு வீதி உள்பட வீதிகளை சேர்ந்த 25 பேர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 188 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.

கோவையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1480ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கோவையில் 188 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கோவை மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.