கோவையில் தங்கம், வெள்ளியில் தயாராகும் முகக்கவசம் : விலை என்ன தெரியுமா?

கோவையை சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் தங்கம் மற்றும் வெள்ளியில் முகக்கவசத்தை தயாரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் சூழலில் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் இன்றியமையாத தேவையாக உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பல நிறுவனங்கள் முகக் கவசங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. இந்த நிலையில் கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் தங்கம் மற்றும் வெள்ளியில் முகக்கவசங்கள் தயாரித்து வருகிறார்.

தங்கம் மற்றும் வெள்ளியை 0.06 மெல்லிய கம்பிகளாக மாற்றி முக கவசங்கள் தயாரித்து வருவதாகவும், மெல்லிய இழைகளாக தங்கம் மற்றும் வெள்ளி பயன்படுத்தப்படுவதால் துணி முகக்கவசம் போல இருக்கும் என்றும் கூறுகிறார் ராதாகிருஷ்ணன்.

மேலும், இந்த முகக்கவசத்தில் ஒரு லேயர் முதல் 4 லேயர் வரை இருக்கும் என்றும் தங்கத்தில் தயாரிக்கப்படும் முகக்கவசம் ரூ.2.75 லட்சம் எனவும், வெள்ளியில் தயாரிக்கப்படும் முகக்கவசம் ரூ.15 ஆயிரம் வரை இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.