கொரோனா பீதியில் துடியலூர் காவல் நிலையம்

கோவை துடியலூர் காவல் நிலையத்தில் மேலும் 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே நேற்று ஒரு பெண் காவலர் உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

துடியலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு காவலருக்கு காய்ச்சல் இருந்ததை அடுத்து கடந்த 4 நாட்கள் முன்பு 30 காவலர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஒரு பெண் காவலர் உள்ளிட்ட 5 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது, தொற்று உறுதி செய்யப்பட்ட 5 காவலர்களும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து காவல் நிலையம் முழுவதும் கிரிமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டதுடன், காவல் நிலையமும் மூடப்பட்டது.

மேலும் அதே வளாகத்தில் செயல்பட்டு வந்த துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையமும் மூடப்பட்டது. இதையடுத்து தற்போது துடியலூரை அடுத்து உள்ள தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் வேணுகானம் திருமண மண்டபத்தில் துடியலூர் காவல் நிலையம் மற்றும் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையமும் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு பணிபுரியும் காவலர்கள் 10 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது அதில் 2 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. ஒரே காவல் நிலையத்தில் பணிபுரியும் 7 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அங்கு பணியாற்றி வரும் காவலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.