விவசாயிகளுக்கு இ-பாஸ் வழங்குக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

விளை நிலங்களில் விவசாய பொருட்களை அறுவடை செய்யவும், சந்தைப்படுத்தவும் அதற்காக வரும் விவசாயிகள், விவசாய கூலிகளுக்கு இ-பாஸ் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணியிடம் மனு அளிக்கப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: கோவை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகள் வெங்காயம், தக்காளி, முட்டை கோஸ், வாழை, தென்னை, வெண்டைக்காய் என பயிர்வகைகளை விவசாயம் செய்து வருகின்றனர். இதனிடையே மாவட்ட எல்லைப்பகுதிகளில் விவசாயம் செய்யும் விவசாயிகள், விவசாய வேலைக்கு வரும் கூலி தொழிலாளிகள் என பல்வேறு தரப்பினரும் அருகில் உள்ள மாவட்ட எல்லைப்பகுதிகளில் இருந்து வருபவர்களாக இருக்கிறார்கள். ஊரடங்கு காரணமாக விளைபொருட்களை அறுவடை செய்ய கூலி ஆட்கள் வருவதில் சிக்கில் உள்ளது. அவர்களுக்கு இ-பாஸ் மறுக்கப்படுகிறது. எனவே விவசாயிகளுக்கு இ-பாஸ் வழங்க வேண்டும்.

மேலும் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்ள ஆட்களை முழுமையாக விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் விவசாயத்திற்கு நிலவி வரும் ஆட்கள் பற்றாக்குறை குறையும். என்று அதில் கூறப்பட்டுள்ளது.