காவலருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய  கமிஷனர்

கோவை தெற்கு காவல் மண்டலத்தில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை மாநகர கமிஷனர் சுமித் சரண் வழங்கினார்.

கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில், கோவை தெற்கு மற்றும் மேற்கு காவல் மண்டலத்தில் 8 காவல் நிலையங்களில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு கையுறை, முகக்கவசம், கிருமி நாசினிகள் மற்றும் ஊட்டச்சத்து உணவுப் பொருட்களை மாநகர கமிஷ்னர் சுமித் சரண்  வழங்கினார்.

மாநகரக் குற்றப்பிரிவு துணை கமிஷனர் உமா மற்றும் உதவிக் கமிஷனர் செட்ரிக் மனுவேல் உள்ளிட்டோர் காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினர்.

அப்போது காவலர்களிடையே பேசிய கமிஷனர் சுமித் சரண், வாகன சோதனைகளில் ஈடுபடும் காவலர்கள் கட்டாயம் பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், குற்றவாளிகளைப் பிடிக்கச்செல்லும்போது கையுறைகள் அணிய வேண்டும், அனைத்துக் காவலர்களும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். காவலர்கள் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும், உடற்பயிற்சிகள் செய்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா போன்ற தொற்றில் இருந்து தற்காத்துக் கொண்டு பணிகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.