வரம் பெற்ற வாழ்க்கை தரும் பங்குனி உத்திரம்

தமிழ் மாதத்தில் 12 ஆவது பங்குனி, நட்சத்திரங்களில் 12 ஆவது உத்திரம். இந்த இரண்டும் சேர்த்து பங்குனி உத்திரம் எனும் விழா சனார்தனதர்மா எனும் இந்து மதத்தில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான உற்சவம்.

இந்த நாளுக்கு பல சிறப்புகள் உண்டு. இந்நாள் திருமணத்திற்கு பெயர் பெற்ற நாள். கடவுள்களில் பலருக்கு இந்நாளில் தான் திருமணம் நடைபெற்றது. குறிப்பாக சிவன் பார்வதி, ராமர் சீதா, முருகன் தெய்வயானை, ஆண்டாள் போன்றோருக்கு திருமணம் நடைபெற்ற நாள். இதனாலே இந்நாள் கல்யாணத்திற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. மேலும் இந்த நாள் முருகனும் மிகவும் உகந்த நாள் என்பது எதனால் தெரியுமா?. அசுர வதம் செய்த முருகனுக்கு எதாவது பரிசு வழங்க முடிவு செய்து தேவேந்திரன் தனது மகளையே பரிசாக வழங்கினார். இவர்களது திருமணம் திருப்பரங்குன்றத்தில் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் நடைபெற்றது. இங்கு இன்று வரை முருகன் திருமண கோலத்தில் காட்சியளிக்கிறார்.

மற்ற கடவுள்களுக்கு திருமணம் நடைபெற்றதாலும், முருகனுக்கு தெய்வயானை போன்ற தெய்வ பெண் பரிசாக கிடைத்ததாலும் இந்த நாளில் விரதம் இருந்து வேண்டி கொண்டால் திருமண தடை நீங்கும், கூடிய விரைவில் வரன் அமையும் என்பது பலரது நம்பிக்கை.

இந்த நாளில் கல்யாணம் ஆகாத, திருமண தடை உள்ள ஆண், பெண் பகல் முழுவதும் உணவு எடுத்துக்கொள்ளாமல் இறை வழிபாடு செய்து இரவு பால் மற்றும் பழம் உண்டு விரதத்தை முடித்து கொள்ளலாம். விரதம் மேற்கோள்ளும் பொழுது தெய்வங்கள் தம்பதியராய் இருக்கும் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தால் இதன் பலன் முழுமையாய் கிடைக்கும். உங்களால் முடியும் என்றால் முருகன் தெய்வயானை திருமணம் செய்து கொண்ட திருப்பரங்குன்றத்திற்க்கு சென்று வழிபடலாம்.

இது முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை செய்து முருகனுக்கு பிடித்தமான சர்க்கரை பொங்கல் செய்து சாமிக்கு படைத்து அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து நீங்களும் உண்ணலாம். இதனை மற்றவர்களுக்கு கொடுக்கலாமா என்ற கேள்வி தேவையில்லை, தாரளமாக இதனை மற்றவர்களுக்கு வழங்கலாம்.

இந்நாளில் விரதம் இருப்பவர்கள் திருமணத்தின் போது எப்படி மணமகனும், மணமகளும் மனம் மற்றும் முகம் மகிழ்ச்சியுடன் இருப்பார்களே அதேபோல் எப்பொழுதும் ஆனந்தமாக, வரம் பெற்றவர்கள் போல் வாழ்வார்கள் என்பதும் நம்பிக்கையே.