முகம் சுளிக்க வைக்காத காதல் முத்தம்….

காதல் என்று சொல்கையில் நம் முதல் காதல் கண்முன் தோன்றும். ஒருவர் நமக்கு சொல்லிக் கொடுத்து காதல் எப்போதும் வராது. ஒரு வயதுக்கு மேல் நமக்குப் பிடித்த பெண்ணைப் பார்க்கும்போது நம்மை அறியாமல் அவளை ரசிக்கும் எண்ணம் தோன்றும். நம் வாழ்க்கைப் பயணத்தில் பல காதல் கதைகளைக் கேட்டிருப்போம், பார்த்திருப்போம். ஆனால் நமக்கு வரும் காதல் மட்டும் நம்மில் அறியாத உணர்வுகளையும் நமது சில செயல்களை மாற்றும் அளவுக்கும் இருக்கும். காதல் தோல்விகளைக் கண்டாலே சிலர் மிகவும் மனமுடைந்து போவார்கள்.

சிலர் நமக்குன்னு ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கின்றது, அதைத் தேடி போவோம் என்று நினைப்பார்கள். இந்நிலையில், வாழ்க்கையில் பார்க்காத, கேள்விப்படாத சில காதல் கதைகள் நம்மில் எந்த மாதிரியான எண்ணத்தைத் தோன்றுவிக்கும்? இந்த கேள்விக்கு பதில்தான் தெலுங்கு மொழியில் கடந்த வாரம் திரைக்கு வந்த ‘அர்ஜுன் ரெட்டி’.

பொதுவாகவே, தெலுங்கு சினிமா என்று சொன்னவுடன் நம்மால் பலர் தன்னைமறந்து சிரிப்பார்கள். ஏனென்றால், இம்மொழிப் படங்களால் அதிகமான, நம்பமுடியாத, பளபளக்கும் கமர்ஷியல் மசாலா சினிமாக்கள் எடுக்கப்படுகிறது என்பதால்தான். இருப்பினும், நம்ப முடியாத கதைக் களத்தை வைத்து பல படங்களை எடுத்து அதில் வெற்றியும் கண்டவர்கள் என்பதும்  நிதிர்சனமான உண்மை.

‘அர்ஜுன் ரெட்டி’, இந்த படத்தில் ஆடம்பரக் காட்சி அமைப்போ, கமர்சியல் சண்டைக் காட்சிகள், குத்துப்பாட்டு என்ற பொதுவான தெலுங்கு சினிமா காட்சிகள் ஒன்றும் கிடையாது. ஆனால் இப்படத்தில் படம் பார்த்த மூன்று மணி நேரத்துக்கு பின்னரும் நம்  மனதில் ஆழமாகப் பதியும் அளவுக்கு ஒரு அழகான காதல் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குநர் சந்தீப்.

கதைப்படி, படத்தின் நாயகன் விஜய் அதிகமாக குடிக்கக் கூடியவர். புகைப் பழக்கம் அதிகமாக உள்ளவர். போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி தன்னை மறந்து சில விஷயங்களை செய்யக் கூடியவர் என்று அறிமுக காட்சிகள் நகர்கின்றன. சில பெண்களை அடைய நினைக்கும் காட்சிகளில் இவரின் நடிப்பு அபாரம் என்று சொல்லும் அளவுக்கு இருக்கின்றது.

ஆனால் இந்த மாதிரியான காட்சிகளைப் பார்க்கும்போது நம் மனதில், கதாநாயகன் சைக்கோவாக இருப்பாரா என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அவ்வாறு இல்லை. விஜய் தலைசிறந்த மருத்துவர் என்று அடுத்த காட்சியில் உணர்த்தி கதையின் ஆழம் உணரப்படுகிறது. மங்களூர் மருத்துவக் கல்லூரி ஒன்றில் மருத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுத்து படித்து வருகிறார் விஜய். இவர் படிப்பில் நம்பர் ஒன். ஆனால் அடிக்கடி கோபப்படும் குணம். இந்நிலையில் முதலாம் ஆண்டு மாணவியாக படத்தின் கதாநாயகி ஷாலினி அதே கல்லூரியில் சேர்கிறார்.  முதல் பார்வையிலேயே விஜய்க்கு அவர்மேல் காதல் வரத் துவங்குகிறது. போகப்போக இருவரும் ஒருவருக்குள் இருக்கும் காதலை உணர்ந்து ஆழமாக காதல் வயப்படுகின்றனர். எப்போதும்போல் ஷாலினி வீட்டில் காதலை ஏற்கவில்லை. சாதி, மதம், மொழி என்று பல வகையான காரணம் இவர்களின் காதலைப் பிரிக்கிறது.

அதற்கு பிறகு ஷாலினிக்கு வேறு ஒரு மாப்பிள்ளைப் பார்த்து கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள். இந்த விஷயம் விஜய் கேள்விப்பட்டதும் மிகவும் மனம் உடைந்து மது, போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிறார் விஜய். ஆனால் இவருக்குள் இருக்கும் மருத்துவம் அழியாமல் இருக்கின்றது. ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிகிறார் விஜய். காதல் தோல்வி மட்டும் அவர் மனதில் நீங்காமல் இருக்க, ஒரு நடிகை விஜய்யிடம் ட்ரீட்மெண்ட்க்காக வரும்பொழுது இருவருக்கும் ஒரு நட்பு ஏற்படுகிறது.

ஆனால் விஜய் மனதில் அவள் உடம்பை ரசித்தால் போதும், காதல் என்ற எண்ணம் வரக் கூடாது. அதில் மீண்டும் விழத் தயாராக இல்லை என்று ஆணித்தரமாக இருக்கும்பொழுது, அந்த பெண்ணுடன் எல்லை கடக்க ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது. அப்பொழுது அந்த பெண் ‘ஐ லவ் யூ’ என்று சொன்னவுடன் அவளை தூக்கி எறிந்து விட்டு செல்கிறார் விஜய்.

மனதில் ஏகப்பட்ட குழப்பம். வாழ்க்கை மீது ஒரு பிடிப்பு இல்லாமல் இருக்கும் தருணம். அதிகமாக போதைப் பழக்கம் என இருக்கும் தருவாயில், ஒரு எமர்ஜென்சி ஆபரேஷன் செய்வதற்கு விஜய்க்கு ஒரு அழைப்பு வருகின்றது. அதிகமாக மது அருந்தி இருக்கும் தருணம் அது. ஆபரேஷன் தியேட்டருக்கு சென்று அரை மயக்கத்தில் ஆபரேஷன் செய்து முடிக்கிறார் விஜய். ஆனால் குடிப்பழக்கத்தில் ஒருவருக்கு ட்ரீட்மெண்ட் பார்ப்பது தவறு என்று சொல்லி அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கிறார்கள்.

இதனால் சிறிது காலத்திக்கு மருத்துவராக பணி செய்ய முடியாத நிலைமை ஏற்படுகிறது. அதிகமான கஷ்டத்தை மனதில் தாங்கிக் கொண்டு இருக்கும் விஜய், மீண்டும் ஷாலினியை ஒரு பூங்கா ஒன்றில் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. அப்பொழுது ஷாலினி எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறார். அப்போது அதிர்ச்சி தரும் செய்தியாக, ஷாலினியின் வயிற்றில் வளர்வது விஜய்யின் குழந்தை என்று தெரிய வருகிறது. தன் வயிற்றில் வளரும் குழந்தைக்காக, பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை மற்றும் பெற்றோரை தூக்கி எறிந்துவிட்டு வாழ்ந்து வருகிறார் ஷாலினி. விஜய் உடனே அவரைக் கட்டிப்பிடித்து நீயும் நானும் சேர்ந்து வாழ வேண்டும் என்று சொல்லி உதட்டோடு முத்தமிடுகிறார்.

அந்த இடத்தில் காமம் கண்ணுக்குத் தெரியவில்லை. அன்பு, மனதுக்குள் இறுக்கமான காதல், இந்த காதல் திருமணத்தில் ஒன்று சேருகிறது. இயக்குநர் சந்தீப், காதல், காமம், அன்பு, நட்பு, மக்களின் உணர்வு என்று பல வகையான திரைக்கதைக் களத்தை மிக அழகாக கையாண்டு இருப்பது, பார்க்கும் மக்களை சிந்திக்க வைக்கின்றது என்று சொல்லலாம். நடிகர் விஜய் மற்றும் ஷாலினியின் நடிப்பு இந்திய சினிமாவில் ஒரு புது சரித்திரம் படைக்கும் அளவுக்கு இருக்கின்றது. ஒளிப்பதிவு கண்ணைப் பறிக்கவில்லை, மனதில் பதியும் அளவுக்கு ராஜு தொட்ட உழைப்பு தெரிகின்றது. இசை ராதன் ஒரு புது வடிவில் இசைக் களத்தை படத்தில் பதிவிட்டு உள்ளார். மொத்தத்தில் ‘அர்ஜுன் ரெட்டி’ பார்க்கும் அனைவரின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டது. மூன்று மணி நேரத்திற்கு மேல் படம் ஓடினாலும் நல்ல கதையம்சம் உள்ளதால் வெற்றியின் உச்சத்தைத் தொட்டுவிட்டது.

—– பாண்டிய ராஜ்.