அஜீத்தின் உழைப்பை உறிஞ்சிய அட்டைப் பூச்சி

விவே“கம்” போல ஒட்டிக்கொண்டு நகர மறுக்கும் கதை. ஆனால் திரைக்கதை தான் விமர்சிக்கப்பட வேண்டிய முதல் கருத்து. நாயகன் அஜய்குமார் 80 நாடுகள், 8 ஏஜென்சிகளால் தேடப்படும் உளவாளியாக இருப்பதாகக் கதை. கதையும் இப்படித்தான் தேட வேண்டியிருக்கிறது.

தன்னோடு பணியாற்றுபவர்களால் துரோகத்திற்கு ஆளாகிறார். சாவின் விளிம்பிலிருந்து மீண்டும் வருகிறார். மீண்டு வருகிறார். கடத்தப்பட்ட மனைவியை மீட்டு, சதிகளை முறியடித்து, இந்தியாவுக்கான அச்சுறுத்தலைத் தடுத்து நிறுத்துகிறார்.

உலகெங்கும் அரங்கு நிரந்த காட்சிகள் என்று விளம்பரங்கள் இருக்கட்டும். மனசு நிறைக்கும் ஒரு காட்சிகூட இல்லாதது, விவேகத்தின் வேகத் தடை.

படத்தின் பெரிய ஒரே பலம்… அஜித். பத்தி பத்தியாய் அஜித் பத்தியே பாராட்டலாம். அவ்வளவு மெனக்கெடல். சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்ஸ்… அசத்தலான ஸ்க்ரீன் ப்ரசென்ஸ், புதிய உடல் மொழி, உச்சரிப்பு, கம்பீரம் என்று 25 வருடத் திரை அனுபவம் கை கொடுக்கிறது. அஜித்தின் முதுகுக்குப் பின¢னால்தான் படத்தின் அத்தனை பலவீனங்களும் ஒளிந்துகொள்கின்றன.

படத்தின் வசனங்களில்கூட ‘தல தல’ என்று ஹீரோயிஸத் துதி தலை தூக்குவது, பாடலில் ‘தலை… விடுதலை’ என்று இயற்றப்படுவதை எல்லாம் தன் இயக்குநர்களுக்கு அஜித் இனி, தன் அறிக்கை விட்டே தடுக்கலாம்.

அனிருத்தின் மெட்டாலிக் பின்னணி, வாய் பிளக்க வைக்கிற வெற்றியின் ஒளிப்பதிவு, ஆண்டனி எல்.ரூபனின் படத்தொகுப்பு (குறிப்பாக ஆக்ஷன்களில்), க்ஷிதிஙீ என்று வரிசை கட்டி நிற்கிற அத்தனை நல்ல விஷயங்களுக்கும் தனித் தனி கிரீட்டிங் மெயில் அனுப்பலாம்.

துறுதுறு அக்ஷரா ஹாசன் குட்டி வில்லியாகக் காண்பிக்கப்படுவது கொஞ்ச நேர விறுவிறு. பிறகு அவரது வலியை நமக்கு உணர்த்துவது படத்தின் க்யூட் ட்விஸ்ட். அவர் கண்களாலேயே துடிப்பாக நடிக்கிறார். ஆனால், கண்களால் நடிக்க வேண்டிய சங்கேத மொழி வாய்ப்பு இருந்தும்…மிஸ் செய்கிறார், மிஸஸ் அஜய் குமார் (காஜல் அகர்வால்).

படத்தின் ரிச்சான பலவீனம், (வ¤வேகமில்லாத) வில்லன் விவேக் ஓபராய்… எல்லா தேசத்து நல்லவர்களும், கெட்டவர்களும் தமிழில் பேசி, தமிழ் புரிந்து நடிப்பதைப் பார்த்தால், நிஜமாகவே, நம் தமிழ் மொழி, உலகப் பொது மொழி ஆகிவிட்டதோ என்கிற இறுமாப்பு வருகிறது.

ஆனால், படம் முழுக்க வரும் மொழி மாற்று சப்-டைட்டிலில் ஏன் அத்தனை தமிழ்ப் பிழைகள்? படத்தின் முடிவில் இடம்பெறும் சமர்ப்பணம் க்ரெடிட் கார்ட்டில் ஆண், பெண் பொறுப்புகள் குறித்த பிற்போக்குவாதம் தெரிகிறதே?

செர்பியா, ஸ்லோவேனியா, பல்கேரியா என்று படம் நாடு நாடாய்ப் பறக்கிறது. செயற்கை பூகம்பம், உளவு அமைப்பு, விமானம், ஹெலிகாப்டர், பைக், கன், புல்லட் ட்ரெயின், விதவிதத் தளவாடங்கள், ஹேக்கர்ஸ், சிசிடிவிகள், ஹோலோகிராம், புளூட்டோனியம் என்று ஹை-டெக்கான விஷயங்கள் அணி வகுத்தாலும், கதை மட்டும்  நெட்வொர்க் இல்லாமல் தவிக்கிறது.

எங்கேயோ காட்டில் விழும் அஜித், பனிமலைகளில் இருந்து புரண்டு வருகிறார்.

காட்சிகளைப் புரிந்துகொள்ள ஏதுவான, சினிமாவின் மிக முக்கிய அம்சமான ‘டோபோக்ராபிக் பர்பெக்சன்’ கண்டுகொள்ளப்படவில்லை.

சண்டைக் காட்சிகளைப் பெரும்பாலும் ‘ஹார்ட் கோர்’ திரைப்படத்தின் தாக்கத்தில் உருவாக்கியிருந்தாலும், அது நம் தமிழ் ரசிகர்களுக்கு நல்ல ‘ட்ரீட்’ தான்.

கபிலன் வைரமுத்துவின் வசனங்களில் தனித்தமிழ் மின்னுகிறது. அங்கங்கே ‘தலைத்’ தமிழ் புகுந்து கொள்கிறது. அசத்தல் ஹாலிவுட் டைப் படத்திற்காக இப்படியொரு அம்மன் பட டைப் பாடலுடன் க்ளைமேக்ஸ்!

அர்ப்பணிப்புள்ள ஹீரோ, பிரம்மாண்டத் தயாரிப்பு, தொழில் நுட்பங்கள், இத்தனையையும் ஒருங்கிணைந்து வியர்க்க வியர்க்க வேகமாகப் பணியாற்றிய இயக்குநர் சிவா… இது தனது காஸ்ட்லியான படம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

  • மோனா