கோவையில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள்  இதனை உறுதிப்படுத்த, ரத்த மாதிரிகள் சென்னை சென்று அங்கு சோதனை செய்த பிறகு தான் முடிவினை தெரிந்து கொள்ள முடியும். ஆனால் தற்பொழுது கோவையிலும் இதற்கான முடிவுகளை தெரிந்து கொள்ள கொரோனா பரிசோதனை மையம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உருவாக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி திறந்து வைத்தார்.

கோவை மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  இன்று (20.03.2020) கொரோனா வைரஸ் பரிசோதனை மையத்தினை  மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி திறந்து வைத்தார். இந்நிகழ்வின்போது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் அசோகன் மற்றும் மருத்துவர்கள்  உடனிருந்தார்.

இதன் பின் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின் படி கோவையில் கொரோனா வைரஸ் தொடர்பான முன்னேச்சரிக்கை, தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை விமானநிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் கொரோனா வைரஸ் தொடர்பாக சோதனை செய்வதற்கு  மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம்  மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு,  கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சளி, காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு, கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை அறிய அவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு சென்னையிலுள்ள பரிசோதனை மையத்திற்கு  அனுப்பி பரிசோதனை முடிவுகளை பெற்றுவந்தோம்.

தற்போது, கோவை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பரிசோதனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் சளி, காய்ச்சல் இருமல் போன்ற அறிகுறி உள்ளவர்களுக்கு இங்கே பரிசோதனை செய்து கொள்ளமுடியும். மேலும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஈ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும்  இதற்கென தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்தார்.