சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் பெற்றோர் திருவடி வழிபாடு

கோவை, மேட்டுப்பாளையத்தை அடுத்து கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியர் தங்கள் பெற்றோருக்குத் திருவடி வழிபாடு நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அருளாசியுடனும், பள்ளிச் செயலர் ‘சிந்தனைக் கவிஞர்’ ‘சொல்லின் செல்வர்’ கவிதாசன் தலைமையில் பெற்றோர் திருவடி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள்  தமிழ்ப் பாரம்பரிய உடையணிந்து வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பெற்றோர்களின் கரங்களைப் பிடித்தவாறு மாணவர்கள் வழிபாட்டு நிகழிடமான சச்சிதானந்தர் பொன்விழாக் கலையரங்கிற்கு வந்தனர். திருவடி வழிபாட்டின் முதல் நிகழ்வாக, திருவிளக்கு வழிபாடும், சச்சிதானந்த சுவாமிகளை வணங்கிக் குருவழிபாடும் நடைபெற்றது. பெற்றோர்கள் தங்கள் பாதங்களைத் தாம்பாளத்தட்டில் வைத்திருக்க, அவர்களின் பாதங்களை  மாணவ மாணவியர், தூய நீரிட்டு வழிபாடு செய்தனர். தங்களின் பெற்றோர்களுக்கு மலர் மாலையை அணிவித்தனர். திருமுறைகள் இசைக்க, பெற்றோர்களின் பாதங்களுக்குப் பூ, மஞ்சள் அரிசி, பால் இவற்றைக் கொண்டு, தங்கள் பெற்றோரையே சிவன் சக்தியாகப் பாவனை செய்து, கற்பூர தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினர்.

தொடர்ந்து அருளாசி வழங்கிய பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், ‘‘பெற்றோர் திருவடி வழிபாட்டினை இறைவழியில்  நமது முன்னோர்கள் நடத்தி வந்திருக்கின்றார்கள். விநாயகப் பெருமான், தனது பெற்றோர்களுக்குத் தினந்தோறும்  திருவடிவழிபாடு செய்வதற்கே கலசத்தை வைத்திருந்தார். விநாயகப் பெருமானைப் போல தினந்தோறும் பெற்றோரை வணங்கித் தங்கள் கல்வியைத் தொடங்குவது மாணவ மாணவியர்க்கு நன்மைகளைத் தரும். அத்துடன், மாணவ மாணவியர் என்றில்லாமல் அனைத்து மக்களும் தங்கள் பெற்றோர்களை அவர்களின் பிறந்த நாளின் போதோ, திருமண நாளின் போதோ வழிபாடு செய்கின்ற பழக்கத்தை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். பெற்றோர்களே தங்கள் தெய்வங்கள் என நினைந்து போற்ற வேண்டும்.’’ என்றார்.  வழிபாட்டில் கலந்து கொண்டவர்கள் மற்றும் எல்லோரும் எல்லா வளங்களையும் நலங்களையும் பெற்று வாழவும், மாணவ மாணவியர் பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெறவும் வேண்டுதல் விண்ணப்பம் செய்தார்.

பள்ளிச் செயலர் ‘சிந்தனைக் கவிஞர்’ ‘சொல்லின் செல்வர்’ கவிதாசன் தனது தலைமையுரையில், ‘‘ஒவ்வோராண்டும் பெற்றோர் திருவடி வழிபாடு நமது பள்ளியில்  நடத்தப்பட்டுவருகின்றது. பெற்றோர்களினுடைய ஆசியின் மூலம் மாணவ மாணவியர் சிறந்த கல்வி, மெய்ஞ்ஞானம் மற்றும் நீண்ட ஆயுளினைப் பெற இயலும். ‘ஈன்று புறந்தருதல் தாய்க்குக் கடனே’ என்று தாயின் கடமையையும், ‘சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ என்று தந்தையின் கடமையையும் சங்க இலக்கியமான புறநானூற்றுப் பாடல் குறிப்பிடும். நம்மையெல்லாம் வாழவைக்கின்ற தாயையும் தந்தையையும் போற்றி வணங்குகின்ற வழக்கம் பன்னெடுங்காலமாக உண்டு. பெற்றோரை வணங்கினாலே நாம் மேற்கொள்ளும் செயல்கள் ஒவ்வொன்றும் வெற்றிபெறும் என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர். பெற்றோர்களை இறைவனாக எண்ணி மாணவர்கள் வழிபாடு செய்கின்றபோது, பொதுத்தேர்விலும் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் முதலிடம் பெறமுடியும். மாணவர்களாகிய உங்களைப் பெற்றோர்கள் தற்பொழுது எப்படிக் கவனித்துக்கொள்கின்றார்களோ அதே போல வருங்காலத்தில் நீங்கள் அவர்களைப் கவனித்துக்கொள்ள வேண்டியது உங்கள் கடமையாகும்’’ என்று பேசினார்.

பேரூராதீனம், சாந்தலிங்க மருதாசல அடிகளாரையும், வழிபாட்டில் கலந்து கொண்ட பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களையும் மாணவ மாணவியர் வணங்கி ஆசி பெற்றனர். முன்னதாக வழிபாட்டிற்கு வந்திருந்தோரைப் பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி வரவேற்றார்.  கல்வி ஆலோசகர் நல்லாசிரியர் கணேசன் வாழ்த்துரை வழங்கினார். பள்ளித் துணை முதல்வர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவியரின் உறவினர்கள் கலந்துகொண்டனர். ‘ஏழிசை வல்லபி’ சொர்ணா சோமசுந்தரம் குழிவினர் திருமுறை இசைத்து பெற்றோர் திருவடி வழிபாட்டினை நடத்தினர். பள்ளித் தமிழாசிரியர்கள் சிவக்குமார், சங்கர் மற்றும் பராமரிப்புத் துறையைச் சேர்ந்த கண்ணன் ஆகியோர் இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினைச் செய்திருந்தனர்.