வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், தொண்டாமுத்தூர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சுதாகரன், பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டத்தின் நகர்புற கிராமப்புற மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப உள்ளாட்சித் துறையின் மூலம் மழைநீர் வடிகால் அமைத்தல், சாலைவசதிகள், தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அரசு செயல்படுத்தும் வளர்ச்சித்திட்டப்பணிகள் உரிய முறையில் செயல்படுத்த, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம்பாளையத்தில் ரூ.51.98 லட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட்டு வரும்  மாவட்ட ஊராட்சி வள மைய கட்டிடப் பணியினை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் புணரமைக்கும் பணியினை விரைந்து முடித்து,  பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.