ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இலக்கியப் போட்டிகள்

கோவை, வட்டமலைப்பாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தமிழ் மன்றம் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் இணைந்து கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கு இடையேயான கலை இலக்கியப் போட்டிகள் “யாளி ’20” இரண்டு நாட்கள் நடைபெற்றது.

கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான பாவலர்.அறிவுமதி, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் விஞ்ஞானி வி.சந்தான கோபால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் என்.ஆர்.அலமேலு முன்னிலை வகித்தார். தமிழ்மன்ற ஒருங்கிணைப்பாளர் பா.ஆ.சரவணன், முன்னாள் மாணவர் சங்கச் செயலாளர் ஜெ.தாமஸ் ரெனால்டு ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். முன்னாள் மாணவர் சங்கப் பொருளாளர் பி.பெருமாள் அவர்கள் நிதியுதவிக்கான காசோலையை வழங்கிச் சிறப்பித்தார்.

இந்நிகழ்வினை முன்னிட்டு கவிஞர்.யாழன் ஆதி தலைமையில் “இன்றைய இளைஞர்கள், உடைந்து வீழ்கின்றனரா? உடைத்து எழுகின்றனரா?” என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றமும் நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் மறத்தமிழரின் மண்வாசம் மாறாப் போட்டிகளாகத் தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, மௌன நாடகம், பறையிசை, பேச்சு, கவிதை, தனிநபர் நடிப்பு, கிராமத்துச் சந்தை, கிராமிய நடனம், கலக்கல் கலாட்டா, குறளெடு கதைகொடு, மரபுத் தமிழன்/தமிழாள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இவற்றில் கலந்துகொண்டு தங்கள் திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்திய மாணவ-மாணவியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களுடன் பரிசுத்தொகை மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.