கேபிஆர் கல்லூரியில் பொங்கல் திருவிழா

கேபிஆர் கல்லூரியில் தை திருநாளை முன்னிட்டு பொங்கல் தர்பார் 2020 திருவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நகைச்சுவை பே‌ச்சாள‌ர் கொங்கு மஞ்சுநாதன் கலந்து கொண்டார். இவருடன் கேபிஆர் கல்வி குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி, பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர் ஏ.எம்.நடராஜன், தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் அகிலா, கலை கல்லூரி முதல்வர் பாலுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அசல் கிராம திருவிழா போல் கல்லூரி அலங்கரிக்கப்பட்டு ஓலை குடிசை கட்டி, கரும்புகளுடன் மண் பானையில் பொங்கல் வைத்து இந்த பொங்கல் தர்பார் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக ஆரம்பித்தது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், உரியாட்டம் என அனைத்திலும் கல்லூரி மாணவர்கள் தனது பங்களிப்பை வழங்கினார்கள்.

கல்லூரி மாணவர்கள் முதல் பேராசிரியர்கள் வரை அனைவரும் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டனர். இவர்கள் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து கல்வி சுற்றுலாகாக வந்திருந்தவர்களும் தமிழரின் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டது, அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. அதோடு அவர்களும் நமது நாட்டு கலாச்சாரத்தை தெரிந்து கொள்ளும் விதமாக அமைந்திருந்தது.

வீட்டின் வாசலில் பொங்கல் வைப்பது போன்று இவ்விழா நடைபெறும் கலையரங்கத்தின் நுழைவு வாயிலில் பொங்கல் வைத்தனர். அரங்கத்தில் உள்ள நுழைந்தவுடன் வரவேற்பு முறையில் ஆரம்பித்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு அசைவும் 90 ஆம் காலங்களுக்கு அழைத்து சென்றதுடன் அதில் நம்மை வாழவைத்தது. இவ்விழா மூலம் என்றும் நாங்கள் என்றும் தமிழன் தான் என்பதை உறுதி செய்தது.

இதில் கூடுதல் சிறப்பாக பஞ்சு மிட்டாய், ஜவ்வு மிட்டாய், கிளி ஜோசியம், 1 ரூபாய் பெப்சி என நாம் மறந்த அனைத்தையும் நாம் கண் முன்னே கொண்டு வந்தனர்.