நாயகியாய் தன்னை உருவகித்த நாயனார்!

– ‘எப்போ வருவாரோ’ நிகழ்ச்சியில் டாக்டர் சுதா சேஷய்யன்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் ‘எப்போ வருவாரோ’ ஆன்மீக தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏழாம் நாளான இன்று டாக்டர் சுதா சேஷய்யன் மாணிக்கவாசகர் குறித்து உரையாற்றினார்.

இவர் பேசுகையில், மாணிக்கவாசகருக்குத் தாய், தந்தை வைத்த பெயர் நமக்குத் தெரியாது. அவர் எப்போது பிறந்தார், எப்போது மறைந்தார் என்பதும் நமக்குத் தெரியாது. அவரது பெற்றோர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் எனும் விபரங்கள் கிடைக்கவில்லை. மேலைநாட்டினர் இந்தியர்களுக்கு வரலாற்றினை முறையாக எழுதி வைக்கும் வழக்கம் இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால், ஒருவர் என்றைக்குப் பிறந்தார் எங்கு மறைந்தார் என்பதைப் பதிவு செய்வது அல்ல தமிழருடைய வழக்கம். அவருடைய சமூகப் பங்களிப்பு என்ன, ஆன்மீக பங்களிப்பு என்ன, கலைப் பங்களிப்பு என்ன என்பதை பதிவு செய்வதே நம்முடைய மரபு.

வாத ஊரில் பிறந்ததால் அவர் திருவாதவூரார் என்றழைக்கப்பட்டார். மாணிக்கவாசகர் என்பது அவரது இயற்பெயர் அல்ல. மணி போன்ற சொற்களைக் கொண்டு எழுதினார், பேசினார், பாடினார் என்பதற்காக உருவான காரணப்பெயர் அது.

அவர் எழுதிய திருவாசகம், திருக்கோவையார் ஆகிய நூல்கள் சைவ சமயத்தின் முதன்மையான நூல்களாகத் திகழ்கின்றன. 63 நாயன்மார்களில் மாணிக்கவாசகர் சேர்க்கப்படவில்லை. ஆனால், ஒவ்வொரு சிவ ஆலயத்திலும் இருக்கும் சைவ நால்வர் எனப்படும் சமயக் குரவர்களில் அவர் ஒருவர்.

தன்னை நாயகியாக பாவித்து பல பாடல்களை எழுதினார். பெண்களின் விளையாட்டாக கருதப்படும் அம்மானை விளையாட்டு, தும்பி பற எனும் ஊசல் விளையாட்டு, பொற்சுண்ணம் இடிப்பது ஆகிய வகைகளில் ஏராளமான பாடல்களைப் பாடினார். அவர் பாடிய பாடல்கள் சைவ ஞானமரபின் மேன்மைகளை உலகிற்கு எடுத்து இயம்புவது இன்றும் ஒளி வீசுகிறது.

நிகழ்வில் பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி, நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க, முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே உள்ளிட்ட பல பாடல்களுக்கு பேச்சாளர் ஆன்மீக விளக்கங்களை அளித்தார். திருப்பெருந்துறைக்கு குதிரை வாங்கச் சென்று குருந்த மரத்தடியில் வீற்றிருந்த குருவிற்கு சிஷ்யனாக மாறிய வரலாறு முதல் பரி நரியான கதை வரை மாணிக்கவாசகர் வாழ்வில் நிகழ்ந்த ஏராளமான நிகழ்ச்சிகளை சுவைபட சொற்பொழிவில் விளக்கினார்.

நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணன், நமது நம்பிக்கை இதழின் ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர் .நாளை சொ.சொ. மீ சுந்தரம் அவர்கள் அருணகிரிநாதர் குறித்து உரை நிகழ்த்துகிறார்.