மண்டல அறிவியல் மையத்தில் சூரியகிரகணம் பார்க்க ஏற்பாடு

கோவையில் நாளை வானிலையில் ஏற்படும் அறிய வளைவு சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு கோவை மண்டல அறிவியல் மையத்தில் தீவிரமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

சூரியனை பூமி சுற்றிவரும் பாதையின் தளமும் நிலா பூமியை சுற்றி வரும் பாதையின் தளமும் ஒன்றுக்கொன்று 5 டிகிரி கோணம் சாய்ந்துள்ளன. நிலவு பூமியை சுற்றிவரும் பாதை பூமி சூரியன் உள்ள தளத்தை இரண்டு இடங்களில் வெட்டும். இந்த புள்ளிகளில் நிலவு அமைந்திருக்கும் போது அமாவாசையோ முழு நிலவு நாளோ ஏற்படும் போது சூரியகிரகணம் மற்றும் சந்திரகிரகணம் ஆகியவை ஏற்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான சராசரி தொலைவு சுமார் 14 கோடியே 95 லட்சத்து 97 ஆயிரத்து 870 கி.மீ ஆகும். நிலா சூரியனை விட அளவில் மிக சிறியது என்றாலும், பூமிக்கு அருகே இருப்பதால் மிக பெரிதாக தோன்றுகிறது. நிலவிற்கும் பூமிக்கும் இடையே உள்ள தொலைவை விட பூமிக்கு சூரியனுக்குமான தொலைவு சுமார் 400 மடங்கு அதிகமாகும். ஆனால் நிலவின் விட்டதைவிட சூரியனின் விட்டம் சுமார் 400 மடங்கு பெரியது. இதனால்தான் சூரியனும், நிலவும் வானத்தில் ஒரே அளவுபோல தோன்றுகிறது. எனவே முழு சூரியகிரகணத்தின் போது நிலா சூரியனை முழுமையாக மறைக்கிறது. நிலா பூமியையும், பூமி சூரியனையும் நீள்வட்ட பாதையில் சுற்றிவருவதால் தொலைவு மாறுபாடு ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்குமான தொலைவு குறைந்து, நிலவிற்கும் பூமிக்குமான தொலைவு அதிகரிக்கும் போது கிரகணம் ஏற்பட்டால் வளைவு சூரியகிரகணம் ஏற்படுகிறது.

நிலா சூரியனை முழு மையமாக மறைக்க முடியாத போது சூரியனின் வெளி விளிம்பு பகுதி வளையம் போல வெளியே தெரிவதால் இது வளைவு சூரியகிரகணம் எனப்படுகிறது. இந்தியாவில் கடந்த 2010 ம் ஆண்டு வளைவு சூரியகிரகணம் தோன்றியது. இந்நிலையில் நாளை வளைவு சூரியகிரகணம் ஏற்பட உள்ளது. கோவையில் 93 சதவீத அளவிற்கு நிலா சூரியனை மறைத்து செல்கிறது. சூரியகிரகணத்தை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் கோவை மண்டல அறிவியல் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து கோவை மாவட்ட அறிவியல் அலுவலர் பழனிசாமி கூறியதாவது; கோவையில் 93 சதவீதம் சூரியனை நிலா மறைத்து செல்லும். நாளை காலை 9.28 மணிக்கு துவங்கி 9.31 மணி வரை நெருப்பு வளையம் போல காட்சியளிக்கும். வளைய சூரியகிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது. அது கண்களுக்கு மிகவும் ஆபத்தானது. சூரியகிரகணத்தை பார்ப்பதற்காக தொலை நோக்கி அமைப்பிலான சூரிய ஒளி பிரதிபலிப்பு பெட்டி, சூரிய ஒளி வடிகட்டி தட்டுகள், வெல்டிங் கிளாஸ், சூரிய கண்ணாடி போன்ற வசதிகள் கோவை அவினாசி சாலையில் உள்ள மண்டல அறிவியல் மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 8.06 மணிக்கு துவங்கும் கிரகணம் 11.10 மணிக்கு முடிவடைகிறது. பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் இலவசமாக பார்க்கலாம் எனபழனிசாமி கூறினார்.