உலக தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆண்டு விழா

உலக தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 7 ஆம் ஆண்டு விழா என்.ஜி.பி. கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

உலக தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் அறங்காவலர் தவமணிதேவி பழனிசாமி வரவேற்றார். ‘சென்னையும் அதன் தமிழும்’, ‘சங்க இலக்கியம் – சில பார்வைகள்’ என்ற இரண்டு நூல்களை சிறப்பு விருந்தினர் பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் காளிராஜ் வெளியிட, வழக்கறிஞர் சுமதி பெற்றுக்கொண்டார்.

பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம் விருது பெறுபவர்களை அறிமுகப்படுத்திய பின்னர், சிறப்பு விருந்தினர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உலக தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான விருதுகளை வழங்கினார்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் 2019 ஆம் ஆண்டுக்கான விருதுகளில் ஞானசுந்தரம் உ.வே.சா., தமிழறிஞர் விருதும், எழுத்தாளர் இமயம் பெரியசாமித் தூரன், தமிழ்ப் படைப்பாளர் விருதும், புலவர் இராசு, டாக்டர் நல்ல ஜி பழனிசாமி பிற துறைத் தமிழ்த் தொண்டர் விருதும், தனிநாயக அடிகள் அயலகத் தமிழ் விருதினை ராம்மோகன் இல்லாத காரணத்தால் ஆயிக் கவுண்டரும் பெற்று கொண்டனர். மேலும், ரத்தினம், சுப்பிரமணியன், இரா.முத்துநாகு ஆகியோருக்கு சிறப்பு விருதுகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

தமிழ் இனி மெல்ல சாகும் என்ற நிலை வரக்கூடாது: இது குறித்து உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத் தலைவர் நல்ல ஜி.பழனிசாமி பேசுகையில், ‘சென்னையும் அதன் தமிழும்’ என்ற நூலில் சென்னையில் உள்ள தமிழின் நிலை பற்றியும், ‘சங்க இலக்கியம் – சில பார்வை’ என்ற நூல் சங்க காலத்தில் உள்ள தமிழைப் பற்றியும், தமிழனின் பண்பாடு, கலாச்சாரம் போன்ற பலவற்றைத் தெரியப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. சங்க காலத்தில் தமிழை தமிழ் மன்னர்களும், புலவர்களும் நிலைநிறுத்தியுள்ளனர். ஆனால், தற்போது தமிழ் கவலைக்கிடமாக உள்ளது.

நம் வாழ்க்கைக்கு பிற மொழிகள் உதவ வேண்டும். ஆனால் அது நம்மை அழிக்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம். ஆகவே, தமிழ் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் இனி மெல்ல சாகும் என்ற நிலை வரக்கூடாது என்றார்.

மொழி மனிதனுக்கு கிடைத்த வரம்: துணைவேந்தர் காளிராஜ் பேசுகையில், மொழி என்பது மனிதனுக்கு மட்டும் கிடைத்த வரம். அதிலும் தமிழ் மொழி மனிதம், அன்பு, நட்பு, தவறைத் தட்டி கேட்கும் தைரியம், இயற்கை பாராட்டும் குணம் ஆகிய எண்ணற்ற குணங்களை நமக்குத் தருகிறது.

இத்தகைய தமிழால் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தை ஆரம்பித்து 7 ஆண்டுகளைக் கடந்து நல்ல இலக்கியங்களை படைப்பவர்களைத் தேடி பாராட்டும் நல்ல ஜி. பழனிச்சாமி கொங்கு மண்டலத்தின் மணிமகுடம்.

இந்த 7 ஆம் ஆண்டு விழாவில் 7 விருதுகள் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் ‘சென்னையும் அதன் தமிழும்’ என்ற நூலும், சங்க இலக்கியம் – சில பார்வை என்ற நூலும் வெளியிடப்படுகின்றன. இது தமிழின் பெருமையை எதிர்காலத் தலைமுறைக்கு உணர்த்தும் என்றார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ஆண்டுதோறும் இலக்கியம், பண்பாடு ஆகியவற்றில் தமிழ் வளம் பெருக்கும் இவ்விழாவில் தமிழைப் பெருமைப்படுத்தும் படைப்புகள் மற்றும் படைப்பாளிகள், தமிழ் ஆர்வம் கொண்டவர்கள் எனப் பலரை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த விழா நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து செய்து வரும் நல்ல ஜி.பழனிசாமிக்கு வாழ்த்துகள் என்றார்.