இடைவிடாத உழைப்பு, வாழ்க்கை தரத்தை உயர்த்தும்

கே.எம்.சி.எச் பட்டமளிப்பு விழாவில் டாக்டர். ராகேஷ் குமார் சர்மா பேச்சு

கோவை மருத்துவ மைய கல்வி அறக்கட்டளையின் உறுப்பு கல்லூரிகளான கே.எம்.சி.எச் காலேஜ் ஆப் நர்சிங், பார்மசி, பிஸியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்புகளுக்கான பட்டமளிப்பு விழா என்.ஜி.பி கல்லூரி பாவை அரங்கத்தில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் துணை வேந்தர் டாக்டர். ராகேஷ் குமார் சர்மா கலந்து கொண்டார். இவருடன் கோவை மருத்துவ மைய கல்வி அறக்கட்டளையின் தலைவர் நல்லா. ஜி. பழனிசாமி, செயலர் தவமணி பழனிசாமி, அறக்கட்டளையின் செயல் அலுவலர் டாக்டர். ஓ. டி. புவனேஸ்வரன் மற்றும் உறுப்பு கல்லூரிகளின் முதல்வர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் கோவை மருத்துவ மைய கல்வி அறக்கட்டளையின் தலைவர் நல்லா. ஜி. பழனிசாமி பேசுகையில், கல்வியை முழுமையாக கற்று, தேவைக்கு ஏற்ப திறமைகளை வேலைகளில் காட்ட வேண்டும். மாணவர்கள் கல்வி கற்று தங்களுக்கு உள்ள வாய்ப்புகளை பயன்படுத்துவது குறித்தும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஹெல்த் சயின்ஸ் படிப்பு நாட்டின் மிக முக்கிய படிப்புகளில், முக்கிய இடத்தில் உள்ளது. அதனால் இதனை தேர்ந்தெடுத்து படித்தது மகிழ்ச்சி என்றும், உங்களின் சேவை நாட்டிற்கு மிகவும் தேவை என்று கூறினார்.

இவரை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் டாக்டர். ராகேஷ் குமார் சர்மா பேசுகையில், பட்டம் பெற்ற பட்டதாரிகள் தங்கள் கற்ற கல்வியை நேர்மையான முறையிலும், பொது சுகாதார மேம்பாட்டிற்க்காகவும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். இடைவிடாத கடுமையான உழைப்பு நமது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்று கூறினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக அளவில் தங்க பதக்கம் பெற்ற 10 மாணவர்களுடன் மொத்தம் 580 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.இதில் 123 மாணவர்கள் பார்மஸி பிரிவிலும், 170 மாணவர்கள் நர்சிங் பிரிவிலும்,98 மாணவர்கள் பிசியோதெரபி பிரிவிலும், 188 மாணவர்கள் ஆக்குபேஷனல் தெரபி மற்றும் அலைடு ஹெல்த் சயின்ஸ் பிரிவில் பட்டம் பெற்றனர்.