ஹீரோவா? காமெடியனா?

ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களை நல்வழிப்படுத்த, வழிகாட்ட தலைவர்கள் உருவாவது இயல்பு. அடிமை இந்தியாவில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கி பல தலைவர்கள் அரசியலில் ஈடுபட்டு பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராட இந்திய மக்களை ஒன்றுதிரட்டினர். தமிழகத்தில் வ.உ.சி, பாரதியார் தொடங்கி ராஜாஜி, தந்தை பெரியார் என்று ஒற்றுமைக் குரல் கொடுத்து முன்னேற்றம் காண, சமூக சீர்திருத்தத்தை கையில் எடுத்த அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பிறகு அதன் தொடர்ச்சியாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று பல ஆளுமை மிக்க தலைவர்களை தமிழகம் கண்டுள்ளது.

ஒவ்வொரு தலைவரின் ஆளுமைத்திறனும் அணுகுமுறையும் வேறு, வேறாக இருந்தாலும் அந்த தலைவர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும், பொதுநலம் கருதி அரசியலில் ஈடுபட்டதையும் யாரும் மறுக்க முடியாது. அக்காலத்திய தலைவர்கள் ஒவ்வொருவரும் மக்களிடம் நேரடி தொடர்பு கொண்டவர்கள். மக்களைப் புரிந்து கொண்டு அவர¢களின் நலனுக்காக பல திட்டங்களை உருவாக்கியவர்கள். மக்கள் நலன் இல்லாத, தனிப்பட்ட அரசியல் அவர்களிடம் என்றும் இருந்ததில்லை.

ஆனால் இன்றைய சூழ்நிலையில் மாறுபட்ட குரல்கள் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன. கலைஞர் கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் மறைந்த பிறகு அரசியல் வெற்றிடம் இருப்பதாக ஒரு பேச்சு பலமாக அடிபடுகிறது.

அந்த இடத்தை நிரப்ப நிறைய ‘அமாவாசைகள்’, அண்ணா உங்க செருப்பை நிக்க வையுங்கண்ணா என்பதுபோல, பல புதிய குரல்கள் கேட்கின்றன. அதில் மிக முக்கியமாக ஊடக வெளிச்சத்தில் மின்னுவது தமிழ்த்திரை நாயகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் ஆகியோரே. அதில் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார்.

ஒரு தேர்தலையும் சந்தித்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்கையும் பெற்றிருக்கிறார். இன்னொருவரான ரஜினிகாந்த் “புலி வருது” கதையாக இருந்து வருகிறது.

படத்தில் வரும் பஞ்ச் டயலாக் போல அவ்வப்போது அவர் கருத்து சொல்வதும் அது பரபரப்பாக பேசப்படுவதும், பிறகு அவர் திரைப்படத்தில் நடிக்கப் போவதும், இமயமலைக்குப் போவதும் வாடிக்கை.

இப்போது இடையில் இன்னொரு செய்தி வைரலாகி வருகிறது. இருவரும் இணையத் தயார் என்று அறிவிப்பு வந்திருக்கிறது. இதில் என்ன பரபரப்பு அல்லது புதுமை அல்லது மக்களுக்கான நன்மை தரும் திட்டம் இருக்கிறது என்று புரியவில்லை.

சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்த பெரும் தலைவர்கள் தங்கள் பட்டங்களையும் வசதியான வாழ்க்கையையும் உதறிவிட்டு மக்களுக்குப் பணியாற்ற அரசியலுக்கு வந்தவர்கள், அறிவாற்றலுக்கு மதிப்பு கொடுத்தவர்கள். தங்கள் வாழ்வை, இளமையை சிறையில் கழித்தவர்கள். அவர்கள் மக்களுக¢காக கருத்து சொன்னதற்கும், நமது “இரட்டைக்குழல் துப்பாக்கி” கூறுவதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது.

முன்பெல்லாம் அரசியலுக்கு வருபவர்கள் ஒரு மக்கள் நலக் கொள்கையின் அடிப்படையில் அல்லது ஏதோ ஒரு அரசியல் பெருந்தலைவரின் அரசியல் அணுகுமுறை, செயல்பாடு பிடித்துப்போய் அக்கடசி உறுப்பினராக சேர¢ந்து அரசியலுக்கு வருவார்கள். மகாத்மா காந்தி தொடங்கி மற்ற எல்லா தலைவர்களும் அரசியலில் ஓர் அடிப்படை உறுப்பினராக நுழைந்து பல வகையான போராட்டங்கள், செயல்பாடுகளுக்கு பிறகு தங்களது இடத்தை அடைந்திருக்கிறார்கள். யாரும் மந்திரத்தில் மாங்காய் பறிக்க எண்ணியதும் இல்லை. அப்படி மாங்காய் கிடைத்ததும் இல்லை.

ஆனால் இப்போது அப்படி ஒரு சூழல் இருப்பதாகத் தெரியவில்லை. அதிலும் அரசியலுக்கு வருவதற்கு முதல் தகுதி திரைத்துறை தொடர்புடையவர்களாக இருக்க வேண்டும் என்றாகிவிட்டதோ. இதில் அவரவர் திறனுக்குத் தகுந்தபடி பல்வேறு கதைகளை அள்ளி விடலாம். ஆனால் அதை மக்கள் நம்ப வேண்டும் என நினைக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் உளறலாமா? ஒருவர் ரஜினி, கமல் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பார். இன்னொருவர் அரசியலில் ஈடுபட நான் தான் சீனியர் என்பார். கூடவே அதிர்ஷ்டமும் வேண்டும் என்பார்.

அரசியல் என்பதென்ன சந்தைக்கடையா, கொடுப்பதைக் கொடுத்து தேவையானதை வாங்கிப் போவதற்கு? இவர்கள் யாரும் மக்கள் நலன் குறித்து தெளிவான திட்டம் எதுவும் வைத்திருப்பதாக இதுவரை தெரியவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிக்பாஸ் பைனலுக்கு நேரடியாகத் தேர்வு செய்வதுபோல, நேரடியாக 234 சட்டமன்றத் தொகுதிக்களுக்கும் போட்டிபோடப் போடுவதாக ஒரு அறிவிப்பைத் தந்துவிட்டு அவருடைய படத்தில் நடிக்கப்போய் விட்டார். அவர் மேல் தவறு ஒன்றும் இல்லை.

அவருடைய நிலையைச் சொல்லி விட்டார். ஆனால் இங்கு ஒரு கூட்டமே கூடி அதற்கு பொழிப்புரை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழருவி மணியன் போன்றவர்கள் அரசியல் வானத்தில் திடீரென அசரீரியாகத் தோன்றி ரஜினி இப்படி செய்வார், அப்படி செய்வார் என்கிறார். அவர் ரஜினிக்கு என்ன கொள்கைப் பரப்புச் செயலாளரா? அரசியல் ஆலோசகரா என்றும் புரியவில்லை.

இதை ஆதரித்தோ, மறுத்தோ சம்பந்தப்பட்ட நபர் பேசாத அல்லது கருத்து தெரிவிக்காத வரை இதுபோன்ற விபரீத உளறல்கள் இருந்து கொண்டேதான் இருக்கும். எதற்கும் கருத்துத் தெரிவிக்காமல் மௌனமாக இருப்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு. ஒன்று, ஆமாம் அது உண்மை என¢பது, இன்னொன்று, அடப்போங்கடா லூசுப்பயலுகளா என்பது. இதில் எது சரியென்றும் புரியவில்லை.

கமல்ஹாசன் நிறைய கூட்டங்களில் அரசியல் பேசி விளாசுகிறார். நிறைய வேறு மாநில முதலமைச்சர்களை சந்திக்கிறார்.

ஆனால் மக்கள் முன்னேற்றத்துக்கு என்ன நேரடியான செயல்திட்டம் வைத்திருக்கிறார் என்று இதுவரை வெளிப்படுத்தவே இல்லை. அதையும் மீறி மக்கள் அவருக்கு வாக்களித்திருப்பதை நம்பிக்கொண்டு அவர் இப்படியே தொடர்வது, மேலும் மேலும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது.

ஏற்கெனவே உள்ள அரசியல்வாதிகளில் பலர் இவர்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.

எடுத்துக்கொண்டவர்களும் வயசாகிப்போச்சு, சினிமா சான்ஸ் இல்லாதததால் அரசியல் பக்கம் கரை ஒதுங்குகின்றனர் எனப் பாராட்டி, திட்டி, பொறுமித் தள்ளுகிறார்கள்.

தமிழகம் பல விஷயங்களில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்பதில் ஐயமில்லை. அதற்காக இதுபோன்ற அரிதாரம் + அரசியல் ஆசை குழப்பத்துக்கும் தமிழகம்தான் முன்னோடியா? அறிஞர் அண்ணா, மக்கள் தலைவர் காமராஜர், கலைஞர் மு.கருணாநிதி, எம்ஜிஆர், ஜெ.ஜெயலலிதா போன்றவர்களைப்போல முழங்க வேண்டாம். நீங்கள் மக்களுக்கு செய்வதற்கு வைத்திருக்கும் குறைந்தபட்ச செயல்திட்டங்கள் என்பதையாவது மக்களுக்குப் புரியும்படி சொன்னால்தான் என்ன? அப்படி திருவாயைத் திறந்து சொன்னால் தமிழக மக்களும் யோசித்து வாக்களிக்க வசதியாக இருக்கும். இல்லாவிட்டால் இதுவரை ஹீரோவாக இருந்தவர்கள் வருங்காலத்தில் காமெடியனாக ஆக வேண்டிய நிலை வந்து விடும் என¢பதுமட்டும் திண்ணம்.