மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  ராசாமணி துவக்கி வைத்தார்

கோவை மாவட்டம், நேரு ஸ்டேடியத்தில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.க.தங்கமணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிசந்திரன், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர், ஒருங்கிணைந்த கல்வி அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகிகள், மாணவ மாணவியர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவார் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ஆம் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, இப்போட்டிகளில் முதலாவதாக தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர்களுக்கு சென்னையில் 01.12.2019 அன்று மாநில அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

கோவை மாவட்டத்தில், இன்று இவ்விளையாட்டு போட்டியின் ஜோதியினை ஏற்றி வைத்து, விளையாட்டு போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இவ்விளையாட்டு போட்டியில், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கென்று நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டத்தட்டு எறிதல், ஓட்டப்பந்தயம் (குறை பார்வை உடையவர்), செவி திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டப் பந்தயம். மனவளர்ச்சி குன்றியோருக்கென்று நீளம் தாண்டுதல், ஓட்டப் பந்தயம், உருளைக்கிழங்கு சேகரித்தல், கிரிக்கெட் பந்து எறிதல். உடல் இயக்கக் குறைபாடு உள்ளவர்களுக்கு நடைப் போட்டி, ஓட்டப் பந்தயங்கள், விளையாட்டு போட்டிகள் என பல்வேறு விதமான விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளது.

இப்போட்டிகளில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்கள், சென்னையில் 01.12.2019 அன்று நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். எனவே, மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் இவ்விளையாட்டு போட்டியில் திறமையாக  விளையாடி அனைத்து போட்டிகளிலும் சிறப்புடன் செயல்பாட்டு வெற்றி அடைந்து சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற வாழ்த்துகிறேன். என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்தார்.