சினிமாவிலும் சாதிக்க முடியும்…!

சாதிக்க வேண்டும் என்று பெண்கள் நினைத்தாலும் அவர்களால் எத்துணை பேரால் தங்களுக்கு பிடித்த செயல்களை செய்ய முடிகிறது என்பது கேள்விக்குறிதான். இந்த சமூகத்தால் இன்றும் பெண்களுக்கென்று சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதை முழுமனதோடு ஏற்றுக்கொள்ள முடியாமல், வாழக்கைக்காக வெறுமனே ஒப்புக்கொண்டு பல பெண்கள் வாழ்ந்து வருகின்றனர். அதுபோல் சினிமா உலகில் பெண்களால் சாதிக்க இடம் இருக்கிறதா என்று கேட்டால் குறைவுதான் என்று சொல்வார்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், பொறியியல் பட்டதாரி ஒருவர், வெளிநாட்டில் மேல் படிப்பை முடித்து கைநிறைய சம்பளம் வாங்கினாலும் தனக்குள் இருக்கும் சினிமா ஆர்வத்தை எப்படியும் வெளியில் கொண்டு வருவேன் என்று சொல்லும் ஒரு பெண்ணை சந்திக்கும் சூழல் ஏற்பட்டது.

அப்போது அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை.

‘‘நான்தான் நிஷித்தா மேனன். சிறு வயதில் இருந்தே சினிமா மீது எனக்கு தனி ஈர்ப்பு இருந்தது. சில படங்களை பார்க்கும்போது என்னை அறியாமல் அந்த படத்தின் கதைக்குள் ஒன்றிவிடுவேன். என் பள்ளிப் படிப்பை முடிக்கும் தருவாயில் என் சினிமா பயணம் எப்படி இருக்க வேண்டும் என முடிவு செய்யத் தொடங்கினேன்.

அப்போது என் அம்மா பினா நாயர், என்னை ஊக்கப்படுத்தி பிடித்த விஷயத்தை தைரியமாக செய்ய சொன்னார்கள். எனக்கு பிடித்த புத்தகங்களை படிக்க ஆரம்பித்தவுடன் மக்களின் உணர்வுகளை சினிமாவில் ஆழமாக சொல்ல வேண்டும் என்று என் மனதில் ஆழமாக உறுதி செய்து கொண்டேன்.

அதன்பிறகு, பிரபுதேவா தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். அதற்கு பிறகு நிவின்பாலி தமிழில் நடிக்கும் ரிச்சி படத்தில் பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த சமயத்தில் பெண்களைப் பற்றி ஒரு மியூசிக் வீடியோ பண்ணலாம் என்று முடிவெடுத்து, என்னை மற்றும் காதலே என்ற மியூசிக் mashup செய்து முடித்தேன்.

சினிமாவில் பல கஷ்டங்கள் இருக்கின்றது. பெண்களால் சாதிக்க முடியாது என்று பலர் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த நினைப்பை முதலில் நாம் சுக்குநூறாகத் தகர்த்து எறிய வேண்டும். பெண்ணுக்கு சுதந்திரம் என்பது அவளுடைய இலட்சியப் பயணம் வெற்றி அடைந்தால்தான் என் கருத்து. பெண்கள் சினிமாவில் கண்டிப்பாக சாதிக்க முடியும். நானும் சாதிப்பேன்’’.

– பாண்டிய ராஜ்