எல்ஐசி சந்தை பங்குகள் 17 சதவீதம் உயர்வு

கடந்த ஆகஸ்ட் 2019ல் எல்ஐசி சந்தை பங்குகள் 17 சதவீதம் உயர்வு பெற்றுள்ளது என்று எல்ஐசி நிர்வாக இயக்குனர் டி.சி. சுஷில் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 173 எல்ஐசி கிளைகளின் தலைமை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மூத்த பிரிவு மேலாளர்கள், மார்க்கெட்டிங் மேலாளர்கள் மற்றும் விற்பனை மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் டி.சி. சுஷில் குமார் பேசுகையில், எல்ஐசி தனது 63 ஆண்டு கால சேவையில் கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. அவர்களின் நம்பிக்கையை எல்ஐசி பொக்கிஷமாக கருதுகிறது.கடந்த ஆகஸ்ட் 2019-ல் முதல் காப்பீடு வருமானத்தில் எல்ஐசி தனது சந்தை பங்கை 17 சதவீதம் மீட்டெடுத்துள்ளது. இதன் சந்தை பங்குகள் 50 சதவீதத்தில் இருந்து 67 சதவீதமாக உயர்ந்துள்ளது.எல்ஐசி தேச கட்டமைப்பில் பெரும் பங்காற்றி வருவதோடு, சமூகத்தின் நலனுக்காகவும் செயலாற்றி வருகிறது. சமூக நலனுக்காக எல்ஐசி கடந்த 31 மார்ச் 2019-ல் 29 லட்சத்து 84 ஆயிரத்து 331 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், எல்ஐசியில் ஏற்கனவே 1 லட்சத்து 12 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த நிலையில் கூடுதலாக பல்வேறு நிலைகளில் 16,600 ஊழியர்களை நியமிப்பதன் மூலம் ஊழியர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரிக்கும். கடந்த 63 ஆண்டுகளாக காப்பீட்டு துறையில் பொதுமக்களின் நம்பிக்கையை பெற்ற எல்ஐசி கடந்த 2018-19-ம் ஆண்டில் மிகவும் நம்பகமான பிராண்ட் உள்ளிட்ட 25 மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளது. காப்பீடு தொகையை முழுமையாக செலுத்தாமல் பாதியிலேயே நிறுத்தப்படும் காலாவதியான பாலிசியின் பாலிசிதாரர்கள் பலன்பெறும் வகையில் புதிய சிறப்பு பிரச்சாரத்தை எல்ஐசி மேற்கொண்டு வருகிறது. அதன்படி  அந்த காலாவதியான பாலிசிகள் மீண்டும் புதுப்பிக்கப்படும்.

எல்ஐசி கோல்டன் ஜூப்ளி பண்ட் சமூக மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. எல்ஐசியின் இந்த சமூக முன்முயற்சி வறுமையை நீக்கும்  நோக்கத்துடன் 499 திட்டங்கள் மூலம் பொது மக்கள் மேம்பாட்டிற்கு ஆதரவளித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.