உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம்

கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி அவர்களால் ‘தமிழின் வளம் தமிழர் நலம்’ என்ற கொள்கையோடு தொடங்கப் பெற்ற உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் டாக்டர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில்  ‘சங்க இலக்கியம் – சில பார்வைகள்’ என்னும் தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கிய விழாவில் கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மைச் செயல் அலுவலர் புவனேஸ்வரன் வரவேற்புரை வழங்கினர். உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் செயலர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் தலைமையுரை ஆற்றினார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் சுந்தரமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் மருத்துவர் அருண் பழனிசாமி சிறப்பு அழைப்பாளர்களுக்குப் பூங்கொத்தும் நினைவுப் பரிசும் வழங்கிச் சிறப்பித்தார். தமிழறிஞர் ஞானசுந்தரம் கருத்தரங்கத் தொடக்கவுரை ஆற்றினார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் மதியுரைஞர் முத்துசாமி நன்றியுரை வழங்கினார். இரண்டு நாட்கள்  நடைபெற்ற இக்கருத்தரங்கில் 17 தமிழறிஞர்கள் சங்க இலக்கியம் தொடர்பான கட்டுரைகளை வழங்கினர். ‘சங்க இலக்கியத் தனித் தன்மைகள்’ என்ற பொருண்மையில் முதல் நாளும் ‘சங்க இலக்கிய ஆளுமைகள்’ என்ற பொருண்மையில் இரண்டாம் நாளும் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.

இரண்டாம் நாள் கருத்தரங்கினைத்தொடங்கி வைத்து உரை ஆற்றிய உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி  தொன்மைத் தமிழின் பெருமைகளையும் தமிழின் இன்றைய நிலையையும் தமிழ் மொழியை அழிவின் விளிம்பில் இருந்து காப்பதில் தலைப்பட வேண்டிய அவசியம் குறித்தும் பேசினார். நிறைவு விழாவில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் மதியுரைஞர் முத்துசாமி வரவேற்புரை நல்கினார். கருத்தரங்க நிறைவுரையில் சங்க இலக்கியத்தின் சிறப்புகளைப் பறைசாற்றும் இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் பேசப்பட்ட கருத்துக்களைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் சுந்தரமூர்த்தி தொகுத்துரைத்துச் சிறப்பித்தார். விழாவின் நிறைவில் டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல்  கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் குப்புச்சாமி நன்றியுரை வழங்கினார்.